ADDED : நவ 03, 2025 02:23 AM
வக்கீல் வீட்டில் திருடிய சிறுவன் கைது
மாதவரம்: மாதவரம், பத்மாவதி பிரதான சாலையைச் சேர்ந்தவர் அமிர்த ராஜேஸ்வரி, 45; வழக்கறிஞர். இவரது வீட்டில் இருந்து, ஆகஸ்ட் மாதம், 3 சவரன் நகை திருட்டு போனது. மாதவரம் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் என தெரிந்தது. நேற்று சிறுவனை கைது செய்த போலீசார், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
பூந்தமல்லி: பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியில் கஞ்சா விற்ற, ஒடிசாவைச் சேர்ந்த கனாநாத் மாலிக், 33, என்பவரை கைது செய்த பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
பூக்கடை: பூக்கடை, ராசப்பா தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 52. இவர், நேற்று பூக்கடை, அய்யாபிள்ளை தெரு வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த இருவர் அண்ணாமலையை தாக்கி, 1,000 ரூபாய், மொபைல்போனை பறித்து சென்றனர். விசாரித்த பூக்கடை போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தருண், 20, பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்த விக்கி, 23 ஆகியோரை கைது செய்தனர்.
மாணவி தற்கொலை முயற்சி
சென்னை: ஆந்திரா மாநிலம் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவகுமாரி, 25. இவர், கோட்டூர்புரத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி, சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்து வருகிறார். துாக்கமின்மையால் அவதிப்பட்ட சிவகுமாரி, 'டெட்டால்' குடித்து தற்கொலைக்கு முயன்றார். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின் உபகரணம் திருடியோர் சிக்கினர்
புழல்: செங்குன்றம், காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத், 47; மின் வாரிய ஊழியர். இவர், கொளத்துார், பத்மாவதி நகர் பிரதான சாலையில் உள்ள, மின் இணைப்பு பெட்டியை நேற்று முன்தினம் சோதனை செய்தார். அப்போது, அதிலிருந்த 'ஜங்ஷன்' பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் திருடுபோனது தெரிந்தது. விசாரித்த புழல் போலீசார், திருட்டில் ஈடுபட்ட புழல் பகுதியைச் சேர்ந்த ஐசக், 21, வருண், 23 ஆகியோரை கைது செய்தனர்.
'ஏசி' வெடித்து வீட்டில் தீ விபத்து
ஓட்டேரி: ஓட்டேரி, கொசப்பேட்டை, வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 33; தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டில் ஏற்பட்ட குறைந்த மின்னழுத்தம் காரணமாக, படுக்கையறையில் இருந்த 'ஏசி' நேற்று மதியம் திடீரென வெடித்து, தீப்பிடித்து எரிந்தது. வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த, 'ஏசி, வாஷிங் மிஷின்' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தீக்கிரையாகின.
ரகளையில் ஈடுபட்ட ரவுடிக்கு 'காப்பு'
ஓட்டேரி: ஓட்டேரி, நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 39; ரவுடி. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், அப்பகுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர் மீது, கே.கே நகர், ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில், வழக்குகள் உள்ளன. விசாரித்த போலீசார், ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு
பெரம்பூர்: கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஹென்றி பெர்னாட், 35; ஆட்டோ ஓட்டுநர். இவர், பெரம்பூர், பல்லவன் சாலையில், நேற்று முன்தினம் இரவு சவாரி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. சுதாரித்தவர் ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். இதனால், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. அதில் பயணித்த பெண் தப்பினார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் திருஞானவேல் உதவியுடன் ஹென்றியின் உறவினர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

