UPDATED : நவ 21, 2026 07:34 PM
ADDED : நவ 21, 2026 07:34 PM
சென்னை: சிறுமியின் சமூக வலைதள பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்த பரசுராம், 19, என்ற வாலிபருக்கு, ஓராண்டு சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ‘போக்சோ’ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும், 17 வயது சிறுமியின் பெற்றோர், 2021ம் ஆண்டு, ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர்.
அதில், தன்னுடைய மகளின் சமூக வலைதள பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதுடன், அவரது பெயரில் போலியாக கணக்கு தொடங்கி, ராயப்பேட்டையைச் சேர்ந்த பரசுராம், 19, என்ற வாலிபர், தினமும் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ராயப்பேட்டை மகளிர் போலீசார், சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்துவந்த பரசுராமை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து, பரசுராம் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து பரசுராமுக்கு ஓராண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 15 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
