/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு; ஆந்திரா, கர்நாடகா சீசன் முடிவதால் சிக்கல்
/
வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு; ஆந்திரா, கர்நாடகா சீசன் முடிவதால் சிக்கல்
வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு; ஆந்திரா, கர்நாடகா சீசன் முடிவதால் சிக்கல்
வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு; ஆந்திரா, கர்நாடகா சீசன் முடிவதால் சிக்கல்
UPDATED : ஆக 23, 2024 06:40 AM
ADDED : ஆக 22, 2024 11:45 PM

கோயம்பேடு :ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சீசன் முடிவதால், வெங்காயம் வரத்து குறைந்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 'விரைவில் 1 கிலோ, 100 ரூபாயை தொடும்' என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு, வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேஷியா, துபாய், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதில், காரம் அதிகமுள்ள ஆந்திரா வெங்காயம், 2 -3 நாட்களும், கர்நாடகா வெங்காயம் 3 - 5 நாட்களும் தாக்குப் பிடிக்கும் தன்மை உடையது. இவ்விரு மாநிலங்களிலும், தற்போது வெங்காயம் சீசன் முடிவிற்கு வந்துள்ளதால், வரத்து குறைந்துள்ளது.
அதிர்ச்சி
அதேபோல மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இருந்தும் சென்னைக்கு வெங்காயம் வரத்து உள்ளது. மஹாராஷ்டிரா வெங்காயத்தை பொறுத்தவரை, ஆறு மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும் தன்மை உடையது; காரம் இருக்காது.
கோயம்பேடு சந்தைக்கு தினமும் 1,200 டன் வெங்காயம் தேவை உள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் தற்போது, 700 முதல்- 800 டன் வெங்காயம் மட்டுமே வருகிறது.
இதில், 400 முதல்- 500 டன் வெங்காயம் மட்டுமே, தரமானதாக உள்ளது. மற்றவை, இரண்டாவது மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ளன.
நேற்று முன்தினம் மொத்த விற்பனையில், 1 கிலோ வெங்காயம் 38 -- 46 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 46 -- 52 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் 65 முதல்- 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது விரைவில், 100 ரூபாயைத் தாண்டும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், தற்போது வெங்காயம் விலை உயர்ந்து வருவது, இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ரசாயன பொடி
இது குறித்து, சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:
ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வரத்து நின்றுள்ளது. நாசிக்கில் இருந்தும் வரத்து குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்தை பொறுத்தே, அவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, விரைவில் 1 கிலோ வெங்காயம், 100 ரூபாயை தொட வாய்ப்புள்ளது.
வெங்காயம் சாகுபடியை பொறுத்தவரை, பயிரிட மிதமான வானிலை அவசியம். இரு பருவங்களாக வெங்காய விளைச்சல் நடக்கிறது. இந்தாண்டின் இரண்டாவது பருவ சாகுபடி, செப்டம்பர் துவங்கி நவம்பர் முடியும்.
இதனால், டிசம்பரில் இருந்து வரத்து துவங்கும். ஜனவரி, பிப்ரவரியில் வரத்து அதிகரித்து, விலை குறையும்.
ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள், வெங்காய லாரிகளை நேரடியாக வரவழைத்து, தங்களது கிடங்குகளில் சேமித்து, அதன் பின் விற்பனை செய்கின்றன.
மஹாராஷ்டிராவில், 20 முதல் 30 லாரிகள் வெங்காயத்தை சேமித்து வைக்கும் அளவிற்கு, பெரிய கிடங்குகள் உள்ளன.
வடமாநில 'ஆன்லைன்' வியாபாரிகள் ரசாயன பொடி துாவி, வெங்காயத்தை பதப்படுத்தி கிடங்குகளில் இருப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவர்கள் இவ்வாறு பதுக்குவதும், விலை ஏற்றத்திற்கு காரணமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.