/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவரை கண்டித்த ஆசிரியை போலீசுக்கு போன பெற்றோர்
/
மாணவரை கண்டித்த ஆசிரியை போலீசுக்கு போன பெற்றோர்
ADDED : ஜன 08, 2025 10:00 PM
அண்ணா நகர்:அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும், ஆறாம் வகுப்பு மாணவர், பள்ளிக்கு, கண்டபடி முடி வெட்டி, கலர்கலரான சிகை அலங்காரத்துடன் 'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்துள்ளார். இதை பார்த்த மாணவனின் வகுப்பு பெண் ஆசிரியர் கண்டித்துள்ளார்.
பள்ளி முடிந்து கண்ணில் காயத்துடன் வீடு திரும்பிய மாணவன், சிகை அலங்காரத்திற்காக ஆசிரியர் அடித்ததாக தாயிடம் கூறியுள்ளார். அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர்.
பின், அண்ணா நகர் போலீஸ் நிலையம் சென்ற பெற்றோர், மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் அளித்தனர். இந்த சம்பவம், ஆசிரியர்கள் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
பெற்றோர், குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தைவிட ஆசிரியர்களுடன் தான் அதிக நேரம் செலவழிக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வியோடு, ஒழுக்கம், பண்பு, வாழ்க்கை நடைமுறைகள் என அனைத்தும் ஆசிரியர்களால் கற்றுத் தரப்படுகிறது.
மாணவர்கள் தொடர்ந்து தவறான வழியில் செல்லும்பட்சத்தில், அவர்களை திருத்த வேண்டியது ஆசிரியரின் கடமையாகவும், பொறுப்பாகவும் இருக்கிறது. மாணவர்கள் எந்த வயது இருந்தாலும், 'என்னோட பசங்க' என, ஆசிரியர்கள் தான் கூறுவர்.
முன்பெல்லாம் பெற்றோர், 'சொல்ற பேச்ச கேட்கலைன்னா அடிச்சு படிக்க வைங்க' என்பர். ஆனால் இப்போது, நிலைமையே தலைகீழாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஆசிரியர் மீது பழி சுமத்தி விடுகின்றனர்.
பள்ளி ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியாத மாணவர்கள் எதிர்காலத்தில் போலீசாரால் நல்வழிப்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.