/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீதாராம் நகரில் வெள்ள தடுப்பு பணிக்கு 'பெப்பே' சட்டசபை தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
/
சீதாராம் நகரில் வெள்ள தடுப்பு பணிக்கு 'பெப்பே' சட்டசபை தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
சீதாராம் நகரில் வெள்ள தடுப்பு பணிக்கு 'பெப்பே' சட்டசபை தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
சீதாராம் நகரில் வெள்ள தடுப்பு பணிக்கு 'பெப்பே' சட்டசபை தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
ADDED : அக் 15, 2025 02:54 AM

வேளச்சேரி, வேளச்சேரி சீதாராம் நகர், ஒவ்வொரு பருவமழைக்கும் வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளாக அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க, அப்பகுதி மக்கள் முடிவு செய்து உள்ளனர்.
அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, சீதாராம் நகரில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
பாதிப்பு இந்த சாலை, வேளச்சேரி பிரதான சாலையை விட, ஒரு அடி தாழ்வாக உள்ளது. அதேபோல், இந்த நகரில் உள்ள வடிகால்வாய், பிரதான சாலை வடிகால்வாயை விட பள்ளமாக உள்ளது.
இதனால், ஒவ்வொரு பருவமழைக்கும் பிரதான சாலையில் வடியும் வெள்ளம், நகர் வழியாக வீடுகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வடிகால்வாயில் கழிவுநீர் செல்வதுடன், குப்பை, பிளாஸ்டிக் போன்ற வற்றால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வடிகால்வாயில் ஜல்லடை அமைக்காததால், மழைநீருடன் மண், கல், குப்பை சேர்ந்து அடைப்பு மேலும் அதிகரிக்கிறது. இதனால், நகரில் இருந்து வடிகால்வாய் வழியாக மழைநீர் செல்வதில்லை.
மாறாக, பிரதான சாலையில் இருந்து பின்னோக்கி பாய்கிறது. மேலும், கழிவுநீர் குழாய் இயந்திர நுழைவு வாயில் மூடிகளை தரமில்லாமல் அமைத்துள்ளதால், மூடிகள் உள்வாங்கி சாலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இப்பிரச்னைகளை சரிசெய்ய, ஐந்து ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் பருவமழைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
நடவடிக்கை இல்லை இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நகரில் சேரும் மழைநீர், பிரதான சாலை வழியாக தான் வடிய வேண்டும். ஒவ்வொரு பருவமழைக்கும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்படுகிறோம்.
நகரில் உள்ள சாலைகளை மாநகராட்சியும், பிரதான சாலையை நெடுஞ்சாலைத்துறையும் பராமரிக்கிறது. இரு துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து, தடுப்பு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
இரு துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் ஒன்று சேர்வதே இல்லை.
அலட்சியம் ஒவ்வொரு பருவமழை பாதிப்பின்போதும், இடத்தை பார்வையிட்ட கவுன்சிலர், எம்.எல்.ஏ., - எம்.பி., ஆகியோர், ''மழை முடிந்ததும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்; அடுத்த பருவமழைக்கு பாதிப்பு இருக்காது'' என, உறுதியளிக்கின்றனர்.
மழை முடிந்த பின் அவர்களை சென்று பார்த்தால், ''பார்ப்போம்; கடிதம் கொடுங்கள்; அதிகாரிகளிடம் பேசுகிறோம்'' என, அலட்சியமாக பேசுகின்றனர்.
வரும் பருவமழைக்கு முன், வீடுகளில் வெள்ளம் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.