/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காட்சிப்பொருளான 'சிசிடிவி' கேமராக்கள் குற்றவாளிகளின் புகலிடமாகும் பெரம்பூர்
/
காட்சிப்பொருளான 'சிசிடிவி' கேமராக்கள் குற்றவாளிகளின் புகலிடமாகும் பெரம்பூர்
காட்சிப்பொருளான 'சிசிடிவி' கேமராக்கள் குற்றவாளிகளின் புகலிடமாகும் பெரம்பூர்
காட்சிப்பொருளான 'சிசிடிவி' கேமராக்கள் குற்றவாளிகளின் புகலிடமாகும் பெரம்பூர்
ADDED : பிப் 21, 2025 12:22 AM

சென்னை,விரைவில், மூன்றாவது முனையமாக மாறப்போகும் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்து காணப்படுகின்றன.
குறிப்பாக, பள்ளிகள் அதிகம் உள்ள பி.பி., சாலை, பாரதியார் சாலை, பள்ளி தெரு, சுப்பிரமணியம் தெரு, கோவில் அமைந்துள்ள அன்னதானம் சமாஜம் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில், பல செயல் இழந்துள்ளன.
சிலவற்றை காணவில்லை. மேலும் சில சாலைகளில், கேமரா பொருத்தப்பட்ட கம்பம் மட்டுமே உள்ளது. இன்னும் சில இடங்களில், கேமராக்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில், கடந்த மூன்று மாதங்களாக, 10க்கும் மேற்பட்ட மொபைல் போன் பறிப்பு, நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. இவற்றில், குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சமூக ஆர்வலரும், பெரம்பூர் சுற்றுவட்டார மேம்பாட்டு குழு நிர்வாகியுமான ரகுகுமார் அளித்த பேட்டி:
பெரம்பூரில், கடந்த 15 ஆண்டுகளாகவே பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இங்கு, பெரம்பூர்வாசிகள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநில மக்களும் அதிகம் வந்து செல்கின்றனர்.
தற்போது, தொடர்ந்து குற்றச்சம்பவங்களும், சாலைகளில் கஞ்சா புழக்கம், எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி சாலையில் வீடு ஒன்றில் போடப்பட்ட கண்காணிப்பு கேமராவையே, மர்ம நபர்கள் உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைக்கப்படும் கேமராக்களையும் பராமரிப்பதில்லை. தற்போது, கேமரா குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால், எங்களையே செலவழித்து கேமரா வைக்கச் சொல்கின்றனர்.
இதற்கு முன் கமிஷனராக இருந்த விஸ்வநாதன் காலத்தில், பெரம்பூரில் போடப்பட்ட கேமராக்கள் செயல்படாமல் உள்ளன.
செம்பியம் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. கேமரா விஷயத்தில் அலட்சியப்படுத்தினால், குற்றவாளிகளின் புகலிடமாக பெரம்பூர் மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.