ADDED : ஏப் 16, 2025 12:24 AM
படப்பை, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
படப்பை பகுதியில், இந்த சாலையின் மையத் தடுப்புச் சுவர் மீது, பா.ம.க.,வினர் விளம்பரம் வரையும் பணியில், சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சுவர் விளம்பரங்களை அழிக்க, நேற்று நெடுஞ்சாலை துறையினர் படப்பை சென்றனர்.
அப்போது அங்கு திரண்ட பா.ம.க.,வினர், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் கட்சியின் சுவர் விளம்பரங்கள், பல மாதங்களாக அழிக்கப்படாமல் உள்ளன.
அவற்றை தவிர்த்துவிட்டு, பா.ம.க., விளம்பரத்தை மட்டும் அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அனைத்து கட்சிகளின் சுவர் விளம்பரங்களையும் அழிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.

