ADDED : செப் 29, 2026 06:59 AM

புழல்: புழல் அருகே மின்வெட்டை கண்டித்து, நேற்று இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல், ரங்கா கார்டனில், கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த பதிலும் இல்லாததுடன் பிரச்னையும் சரியாகவில்லை.
இதனால் நேற்று இரவு 9:00 மணியளவில், ரங்கா கார்டன் மக்கள் எம்.ஆர்.எச்., சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மின் வாரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'த.வெ.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, எங்கள் பகுதியில் மின் தடை தொடர் கதையாகி உள்ளது. மின்சாரம் எப்போது வரும் போகும் என்றே தெரியவில்லை.
'தொகுதி எம்.எல்.ஏ., இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. அவரை காணவில்லை என, போஸ்டர் ஒட்ட உள்ளோம்' என்றனர்.
