ADDED : நவ 04, 2026 12:29 PM
பெரம்பூர்: ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தொங்கிய பயணியை, ரயில்வே போலீஸ்காரர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.
பெரம்பூர் ரயில் நிலையம் முதலாவது நடைமேடையில் இருந்து, நேற்று காலை ‘நீலகிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ புறப்பட்டது. அப்போது ரயிலில் ஏறிய வாலிபர் ஒருவர், தவறான ரயிலில் ஏறிவிட்டதை உணர்ந்து, ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். இதில் நிலைதடுமாறிய அவர், பெட்டியின் கைப்பிடியைப் பிடித்தபடி தொங்கினார்.
இதை கவனித்த ரயில்வே போலீஸ்காரர் பக்சந்த் மீனா, உடனடியாக அவரை வெளியே இழுத்து காப்பாற்றினார். இதற்கிடையே, ரயிலில் இருந்த அவரது சகோதரர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்.
விசாரணையில், காப்பாற்றப்பட்டவர் முகமது காஜிம் ஆலம், 23, என்பது தெரியவந்தது. போலீஸ்காரரின் துரித நடவடிக்கையால் அவர் உயிர் தப்பினார்.
