ரயில்வே கேட் முழு அடைப்பு: பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு
ரயில்வே கேட் முழு அடைப்பு: பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு
UPDATED : ஜூலை 20, 2026 11:03 PM
ADDED : ஜூலை 20, 2026 10:41 PM
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள அண்ணாமலை நகர் ரயில்வே கேட் முழுமையாக அடைக்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் சைக்கிள்களுடன் குறுகிய வழியில் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகர், அண்ணாமலை நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 50,000க்கும் அதிகமானோர் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2022ல், 30 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக கேட் மூடப்பட்ட நிலையில், பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால், மக்கள் தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர்.
உயிரிழப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்தது. பின், மக்கள் எதிர்ப்பால் ஒருவர் மட்டும் செல்லும் வகையில் சிறிய வழி ஏற்படுத்தப்பட்டது.
நேற்று காலை பள்ளிக்கு சென்ற நுாற்றுக்கணக்கான மாணவர்கள், குறிப்பாக சைக்கிளில் வந்தவர்கள், அந்த குறுகிய பாதையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்ததால் பள்ளிக்கு தாமதமாக சென்றதாக பெற்றோர் தெரிவித்தனர்.
மினி பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நிரந்தர போக்குவரத்து தீர்வை அதிகாரிகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
