/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்மஞ்சேரிக்கு ரெடிமேட் காவல் நிலையம் தயார்!
/
செம்மஞ்சேரிக்கு ரெடிமேட் காவல் நிலையம் தயார்!
ADDED : நவ 19, 2024 12:18 AM

செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி காவல் நிலையம், 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. சோழிங்கநல்லுார் சிக்னல் அருகில், வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில், காவல் துறை செயல்பட்டு வருகிறது.
சொந்த கட்டடம் கட்ட, ஓ.எம்.ஆர்., ஆவின் அருகே, 24,000 சதுர அடி பரப்பு இடம் ஒதுக்கப்பட்டது. அதில், 78 லட்சம் ரூபாய் செலவில், 3,970 சதுர அடி பரப்பில், 2018ம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டது.
நீர்நிலையில் காவல் நிலையம் கட்டப்படுவதாக தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஆறு ஆண்டுகளாக, காவல் நிலைய கட்டடத்தை திறக்கப்படாமல், கட்டிய நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில், சோழிங்கநல்லுார் சந்திப்பில், 100 அடி உயரத்தில், இரண்டடுக்கு ரயில் நிலையங்கள் மற்றும் ரவுண்டானா மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, சிக்னலை ஒட்டியுள்ள, சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களை இடிக்க வேண்டியுள்ளது.
இதனால், இரண்டு காவல் நிலையங்களுக்கான கட்டடத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டி கொடுக்க முன்வந்தது.
தற்போதைய காவல் நிலையத்திற்கு எதிரே, மெட்ரோ ரயிலுக்காக மீட்ட இடத்தில், காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. இதில், 1,800 சதுர அடி பரப்பில், சட்டம் - ஒழுங்கு மற்றும்குற்றப் பிரிவுக்கான காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கணினி அறை என, தனித்தனியாக அறைகள் அமைத்து, கட்டமைக்கப்பட்டு உள்ளன.
இதன் அருகில், 800 சதுர அடி பரப்பில் போக்குவரத்து காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. நிரந்தர கட்டமைப்பு இல்லாமல், எப்போது வேண்டுமென்றாலும் கழற்றி எடுத்து செல்லும் வகையில், ரெடிமேட் காவல் நிலையமாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், விரைவில் இந்த காவல் நிலையம் திறக்கப்பட உள்ளது. நிரந்தர காவல் நிலையம் திறக்கும் வரை, இந்த இடத்தில் காவல் நிலையம் செயல்படும் என, போலீசார் கூறினர்.