/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழுதிவாக்கம் ரயில் நிலையத்தை பராமரித்து பாதுகாக்க கோரிக்கை
/
புழுதிவாக்கம் ரயில் நிலையத்தை பராமரித்து பாதுகாக்க கோரிக்கை
புழுதிவாக்கம் ரயில் நிலையத்தை பராமரித்து பாதுகாக்க கோரிக்கை
புழுதிவாக்கம் ரயில் நிலையத்தை பராமரித்து பாதுகாக்க கோரிக்கை
ADDED : பிப் 03, 2025 02:35 AM

சென்னை, வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை மேம்பால ரயில்வே திட்டப் பணிகள், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக, பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ., நீளத்திற்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம், ரயில் பாதை கட்டுமான பணிகள், 4.5 கி.மீ., துாரத்திற்கு முடிந்துள்ளன.
ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் இருந்து, பரங்கிமலை ரயில் நிலையம் வரை, 500 மீட்டர் துாரம் இணைக்கும் கட்டுமான பணிகள், நில பிரச்னைகளுக்கு பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்ட புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை வரை, ரயில்கள் இயக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து வலியுழ்ருத்தி வருகின்றனர்.
ஆனால், பணிகளை விரைவில் முடித்து, இந்தாண்டு துவக்கத்தில் பரங்கிமலை வரை ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு துவக்கத்தில், நங்கநல்லுார், தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில், துாண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்தது.
அப்போது, 157 மற்றும், 158வது துாண்களுக்கு இடையே, பாலம் திடீரென கீழே விழுந்தது. அதனால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்கலேட்டர் வசதியுடன் கட்டி முடிக்கப்பட்ட புழுதிவாக்கம் ரயில் நிலையம், சமூக விரோத கும்பலின் கூடாரமாக மாறியுள்ளது.
பகல், இரவு நேரங்களில், மதுப்பிரியர்கள் இந்த ரயில் நிலையத்தை மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். விலை உயர்ந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டும், களவாடப்பட்டும் வருகின்றன.
எனவே, பரங்கிமலை வரை ரயில் சேவை துவங்கும் வரை, புழுதிவாக்கம் மற்றும் வாணுவம்பேட்டை ரயில் நிலையங்களை முறையாக பாராமரித்து பாதுகாக்க வேண்டும்.
மேம்பால ரயில்வே திட்டப் பணிகள் முடியும் வரை காத்திருக்காமல், வேளச்சேரியில் இருந்து வாணுவம்பேட்டை வரை, ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
- -நமது நிருபர் -