/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைக்கப்பட்ட வடிகால் ஓராண்டாக தொடரும் அபாயம்
/
உடைக்கப்பட்ட வடிகால் ஓராண்டாக தொடரும் அபாயம்
ADDED : நவ 16, 2024 12:29 AM

சென்னை, சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற உடைக்கப்பட்ட வடிகால், ஓராண்டாகியும் மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சியினர் மேற்கொள்ளாததால், விபத்து அபாயம் நிலவுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும், 3,000 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாருவது வழக்கம்.
ஆனால், முறையாக வடிகால்களை துார்வாரப்படுவது இல்லை. இதனாலேயே, சாரல் மழை பெய்தால் கூட சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது.
அவ்வாறு தேங்கும் மழைநீரை, வடிகாலை உடைத்தும், மோட்டார் பயன்படுத்தியும் வெளியேற்றுகின்றனர்.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது, எழும்பூர் -பின்னி சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லுாரி அருகே வடிகாலை உடைத்து, சாலையில் தேங்கிய மழைநீரை மாநகராட்சியினர் அகற்றினர்.
அதன்பின், உடைக்கப்பட்ட வடிகாலை மறு சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் மாணவியர் தவறி விழுந்து காயமடையும் சூழ்நிலை நிலவுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே விபத்து ஏற்படும் முன், மழைநீர் வடிகாலை மறு சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

