எஸ்.ஐ.,யை பட்டாக்கத்தியுடன் வெட்ட பாய்ந்த ரவுடி கைது
எஸ்.ஐ.,யை பட்டாக்கத்தியுடன் வெட்ட பாய்ந்த ரவுடி கைது
UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:20 PM

செங்குன்றம்: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டதுடன், பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,யை பட்டாக்கத்தியால் வெட்ட முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் தெருவில், நேற்று (நவ.,5) இரவு 10:00 மணியளவில் ரவுடி ஒருவர் மதுபோதையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டிருந்தார்.
இது குறித்த தகவலின்படி, செங்குன்றம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், அங்கு சென்று ரவுடியை பிடிக்க முயன்றார். ஆனால் ரவுடி, போலீசின் பேச்சை கேட்க மறுத்து, ‘என்னையே பிடிக்க வருகிறாயா; உன்னை சும்மா விட மாட்டேன்’ எனக்கூறி பட்டாக்கத்தியால் வெட்ட பாய்ந்தார்.
சுதாரித்த எஸ்.ஐ., செந்தில்குமார், ரவுடியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, தன் பெல்ட்டை கழற்றி சுழற்றினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, தகவலறிந்து கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரவுடியை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ், 24 என்பதும், மது போதையில் போலீசையே வெட்ட பாய்ந்ததும் தெரியவந்தது. இன்று (நவ.,6) தினேஷை கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
