/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் ஈரமான சீட், காலதாமத புறப்பாடு மூத்த தம்பதிக்கு ரூ.50,000 இழப்பீடு
/
விமானத்தில் ஈரமான சீட், காலதாமத புறப்பாடு மூத்த தம்பதிக்கு ரூ.50,000 இழப்பீடு
விமானத்தில் ஈரமான சீட், காலதாமத புறப்பாடு மூத்த தம்பதிக்கு ரூ.50,000 இழப்பீடு
விமானத்தில் ஈரமான சீட், காலதாமத புறப்பாடு மூத்த தம்பதிக்கு ரூ.50,000 இழப்பீடு
ADDED : அக் 17, 2024 12:25 AM
சென்னை, 'ஈரமான இருக்கையை வழங்கியதுடன், காலதாமதமாக விமானம் புறப்பட்டதால், இணை விமானத்தை தவறவிட்ட வயதான தம்பதிக்கு, லுப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த தம்பதி ஜோஜு டொமினிக், ஜாஸ்மின் ஜோஜு தாக்கல் செய்த மனு:
சென்னையில் இருந்து ஜெர்மனி பிராங்பேர்ட்க்கு, 2023 ஜூன் 12ல் பயணிக்க திட்டமிட்டோம்.
இதற்காக, 2022 நவ., 20ல், 3 லட்சத்து 57 ஆயிரத்து 509 ரூபாய் செலுத்தி, லுப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்தோம்.
பயண நாளன்று, சென்னையில் இருந்து பிராங்பேர்ட் செல்ல விமானம் நிலையம் சென்றோம்.
சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதாகக் கூறி, 1.30 மணி நேரம் காலதாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
அதுமட்டுமின்றி, ஒதுக்கப்பட்ட இருக்கையின் மேலே இருந்து தண்ணீர் ஒழுகி, இருக்கை ஈரமாக இருந்தது. தண்ணீர் ஒழுகுவது குறித்து, விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்தோம்.
சென்னை வானிலையால், இப்பிரச்னை உருவானதாக, முறையற்ற பதிலளித்தார். இருக்கையில் அமரவில்லை எனில், விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவீர்கள் என மிரட்டினர்.
காலதாமதமாக பிராங்பேர்ட் சென்றதால், அங்கிருந்து கனடா வான்கூவர் செல்லும் விமானத்தில் செல்ல முடியாமல் போனது. கூடுதல் செலவு செய்ய நேரிட்டது.
அதேபோல, பிராங்பேர்ட்டில் இருந்து சென்னைக்கு திரும்பும் விமானம் புறப்பட்டு, 1.30 மணி நேரத்திற்குப் பின், எரிபொருள் கசிவு இருப்பதை கண்டறிந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, மீண்டும் பிராங்பேர்ட்க்கு விமானம் திருப்பி விடப்பட்டது. மாற்று விமானத்தில் சென்னை திரும்பும் வரை, போதிய வசதிகள் செய்து தரவில்லை.
வயது மூப்பால் இருந்த எங்களுக்கு சரிவர உணவுகள், வீல் சேர் உள்ளிட்ட வசதிகளை விமான நிறுவனம் செய்து தரவில்லை. விமான நிறுவன நடவடிக்கையால், கூடுதல் நாட்கள் தங்க வேண்டிய நிர்பந்தமும், கூடுதல் செலவும், மன உளைச்சலும் ஏற்பட்டது.
எனவே, பயணச்சீட்டு கட்டணம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 509 ரூபாய், சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, லுப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த,சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவக்குமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
விமான நிறுவனத்தால் ஏற்பட்ட எதிர்பாராத காலதாமதத்தால், புகார்தாரர்களின் முழு பயணத்திற்கு உரிய மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டது என்ற வாதம் ஏற்கத்தக்கது.
தாமதமான புறப்பாடு, விமானத்தை ரத்து செய்து, புகார்தாரர்களின் பயணத்தை தாமதப்படுத்தி, அசவுகரியத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்திய விமான நிறுவன செயல் சேவை குறைபாடு.
இருப்பினும், புகார்தாரர்கள் நாடு திரும்ப மாற்று ஏற்பாட்டை வழங்கியதால், விமான நிறுவனம் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டியதில்லை.
எனவே, சேவை குறைபாடு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாயை, விமான நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.