ADDED : அக் 31, 2026 06:57 PM

குன்றத்துார்: அங்கன்வாடி மையம் திறப்பு விழா முடிந்ததும், அமைச்சர் தென்னரசு, ஆலந்துார் எம்.எல்.ஏ., ஹரிஷ் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே இன்று (அக்.,31) வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆலந்துார் சட்டசபை தொகுதியில், குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெருகம்பாக்கம், அய்யப்பன்தாங்கல், கோவூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகள் அமைந்துள்ளன.
இங்கு, 4.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இவற்றை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு, ஆலந்துார் தொகுதி எம்.எல்.ஏ., ஹரிஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
த.வெ.க.,வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலராக உள்ள அமைச்சர் தென்னரசுக்கும், ஆலந்துார் எம்.எல்.ஏ., ஹரிஷுக்கும் இடையே, 10 ஊராட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் பனிப்போர் நிலவி வருகிறது.
இதனால், யாருடைய உத்தரவுக்கு முன்னுரிமை அளிப்பது என தெரியாமல், அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து இன்று இருவரும் சென்றபின், அமைச்சருக்கு சால்வை அணிவித்தது தொடர்பாக, அமைச்சர், எம்.எல்.ஏ., ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
