sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொங்கல் சிறப்பு சந்தையில் பொருட்கள் விற்பனை...அமோகம்! பஸ், ரயில்களில் 15 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம்

/

பொங்கல் சிறப்பு சந்தையில் பொருட்கள் விற்பனை...அமோகம்! பஸ், ரயில்களில் 15 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம்

பொங்கல் சிறப்பு சந்தையில் பொருட்கள் விற்பனை...அமோகம்! பஸ், ரயில்களில் 15 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம்

பொங்கல் சிறப்பு சந்தையில் பொருட்கள் விற்பனை...அமோகம்! பஸ், ரயில்களில் 15 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம்


ADDED : ஜன 13, 2025 10:35 PM

Google News

ADDED : ஜன 13, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக, சென்னையில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் வாயிலாக 15 லட்சம் பேர், வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். சென்னையில் இருப்போர் சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதற்காக, கோயம்பேடில் அமைக்கப்பட்ட சிறப்பு சந்தையில், பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர்.

இவர்கள், சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட, கடந்த 10ம் தேதி முதல், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளோடு, கடந்த நான்கு நாட்களில், கூடுதலாக 5,000 பேருந்துகள் இயக்கப்பட்டன.

கடந்த மூன்று நாட்களாக முக்கிய பேருந்து நிலையங்களில், வெளியூர் செல்வோரின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதேபோல் நேற்றும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், வேலுார் மாவட்டங்களுக்கு, நேற்று அதிகளவில் சென்றனர்.

அதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், நேற்று காலை முதலே மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. சென்னையில் இருந்து தெற்கு, மேற்கு மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்பட்ட விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்கள் நிரம்பி வழிந்தன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, தொடர் விடுமுறை நாட்கள் இருந்ததால், பயணியர் கூட்டம், ஒரே நேரத்தில் குவியவில்லை.

இருப்பினும், மாலை நேரங்களில் பயணியர் கூட்டத்துக்கு ஏற்ப, சிறப்பு பேருந்துகளை இயக்கினோம்.

இந்த பொங்கலுக்கு இதுவரை, சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும், 7.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். கடந்த பொங்கலின்போது, 6.60 லட்சம் பேர் பயணம் செய்திருந்தனர்.

சொந்த ஊருக்கு சென்றவர்கள், சென்னை திரும்ப வசதியாக, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல், ரயில்களில் ஐந்து லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இரண்டு லட்சம் பேரும், கார் போன்ற சொந்த வாகனங்களில் 50 ஆயிரம் பேர் என, மொத்தம் 15 லட்சம் பேர், கடந்த நான்கு நாட்களில், பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இருப்போர், சூரிய பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் கொண்டாடுவதற்காக, கோயம்பேடில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, சேலம், மதுரை, தேனி, கடலுார், வேலுார், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து, லாரிகள் வாயிலாக கரும்புகள் எடுத்து வரப்படுகின்றன.

கோயம்பேடு சந்தைக்கு மூன்று நாட்களில் 700 லாரி கரும்பு வந்த நிலையில், நேற்று மட்டும் 260 லாரி கரும்புகள் வந்துள்ளன. 15 எண்ணிக்கை உடைய ஒரு கட்டு கரும்பு 300 --- 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு கரும்பு 60 --- 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 20 --- 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஈரோடு, சேலம, ஆத்துார், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் வரத்து உள்ளது. இதில், 10 செடிகள் உடைய மஞ்சள் கொத்து, 60 --- 70 ரூபாய்க்கும், சில்லரை விலையில் ஒரு செடி மஞ்சள் கொத்து 10 --- 15 ரூபாய்க்கும், இஞ்சி கொத்து ஒன்று, 40 - - 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காய்கறிகளை பொறுத்தவரை, சந்தைக்கு நேற்று, 10,000 டன் காய்கறிகள் வந்தன. இது, தினசரியைவிட 3,000 டன் அதிகம்.

இதில், மொச்சைக்காய் கிலோ 60 ரூபாய்க்கும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிலோ - 40, சிறுகிழங்கு - 140, கார காரணை - 80, துவரங்காய் - 60 ரூபாய்க்கும் விற்பனையானது.

கடந்த வாரங்களில் பனிப்பொழிவு, மழை காரணமாக, பூக்கள் விலை மற்றும் விற்பனை குறைந்தது. பொங்கலை ஒட்டி நேற்று, பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.

மல்லி பூ வரத்து குறைந்த நிலையில், நிலைக்கோட்டையில் இருந்து ‛ஐஸ்' பெட்டியில் மல்லி பூ கொண்டு வரப்படுகிறது. சில நாட்களாக 1,200 ரூபாய்க்கு விற்பனையான மல்லி பூ, நேற்று 2,000 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், முல்லை - 2,000 ரூபாய்க்கும், ஜாதி மல்லி - 1,500 ரூபாய்க்கும் விற்பனையானது.

கடந்த வாரம், கிலோ 100 ரூபாய்க்கு விற்னையான சம்பங்கி பூ, தற்போது 200 ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும், கனகாம்பரம் - 1,000; சாமந்தி - 160 --- 180; பன்னீர் ரோஜா - 200; சாக்லேட் ரோஜா - 300; அரளி - 300 ரூபாய்க்கு விற்பனையானது.

காய்கறிகள், பழங்கள், பூக்கள் வரத்து அதிகமாக இருந்தும், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் வரத்து அதிகரிப்பால், கோயம்பேடு சந்தையில் விற்பனை களைகட்டியது.

மாசு குறைவு

போகி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு, மாநகராட்சி சார்பில் பழைய பொருட்களை எரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால், கடந்த ஆண்டைவிட தற்போது, சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது.

- பிரியா,

மேயர்

சென்னை மாநகராட்சி


வழக்கம் போல் விமான சேவைகள்

போகி பண்டிகையையொட்டி, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் எரிக்கும் பொருட்களால், புகை கிளம்பும். அதனால், வழக்கம் போல் விமான நிலையத்தில் பாதிப்புகள் ஏற்படும் என, அதிகாரிகள் கருதினர்.அதனால், சென்னைக்கு வரும் விமானங்கள், இங்கிருந்து புறப்படும் விமானங்களின் நேரத்தை மாற்றி அமைத்தனர்.அதன்படி, நேற்று காலை சென்னையில் இருந்து, துபாய், அபுதாபி, தோக, மஸ்கட், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், டில்லி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருகை மற்றும் புறப்பாட்டு விமானங்களின் நேரம் மாற்றப்பட்டது.இது குறித்து, முன்பதிவு செய்த பயணியருக்கும் முன்கூட்டியே எஸ்.ஓ.பி., முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், பயணியருக்கு பாதிப்பு இன்றி, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயங்கும் விமானங்கள், நேற்று வழக்கம் போல் இயக்கப்பட்டன.பெங்களூரு மற்றும் டில்லியில் இருந்து வரக்கூடிய மூன்று விமானங்கள், அங்கு நிலவும் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 2024ல், போகி பண்டிகை புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக, 27 வருகை விமானங்கள், 24 புறப்படு விமானங்கள் என, 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால் நேற்று, அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், விமான சேவை பாதிக்கப்படவில்லை.








      Dinamalar
      Follow us