/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஐ.டி.,க்களை முந்தி சவீதா பல்கலை சாதனை
/
ஐ.ஐ.டி.,க்களை முந்தி சவீதா பல்கலை சாதனை
ADDED : அக் 15, 2025 02:50 AM
சென்னை,டைம்ஸ் ஹையர் எஜுகேஷனின் தரவரிசை பட்டியலில், சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் நிறுவனம், ஐ.ஐ.டி.,க்களை முந்தி சாதனை படைத்துள்ளது.
டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் நிறுவனம், 120 நாடுகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட பல்கலைகளின் படிப்பு தரம், ஆராய்ச்சி திறன், மேற்கோள் மதிப்பு, தொழில் இணைப்பு, சர்வதேச பார்வை, கல்வியில் புதுமை, சர்வதேச கூட்டாண்மை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், கடந்தாண்டு, 401 - 500 என்ற தரவரிசையில் இருந்த சவீதா பல்கலை, இந்தாண்டு, 351 - 400 என்ற தரவரிசையில் முன்னேறி உள்ளது. மேலும், இது, முன்னணி ஐ.ஐ.டி.,க்களையும் முந்தி உள்ளது.
இதுகுறித்து, சவீதா பல்கலை வேந்தர் என்.எம்.வீரையன் கூறுகையில், ''ஆராய்ச்சி, புதுமை, தெளிவான நோக்கம் உள்ளிட்டவற்றை லட்சியமாக கொண்டுள்ள சவீதா பல்கலை, 4,000க்கும் மேற்பட்ட காப்புரிமைகள், உலகத்தர ஆராய்ச்சி மையங்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பால், கல்வி சார்ந்த உலகளாவிய பார்வையை நிரூபித்து, தரவரிசையில் முன்னேறி உள்ளது.
தொடர்ந்து கல்வியில் மேம்பட்ட சமூகத்தை உருவாக்கி, தரவரிசையிலும் முதலிடத்தை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.