/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பு பிரச்னையில்...தில்லாலங்கடி குடிநீர் பணிகளை அரைகுறையாக முடிக்க முயற்சி
/
ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பு பிரச்னையில்...தில்லாலங்கடி குடிநீர் பணிகளை அரைகுறையாக முடிக்க முயற்சி
ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பு பிரச்னையில்...தில்லாலங்கடி குடிநீர் பணிகளை அரைகுறையாக முடிக்க முயற்சி
ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பு பிரச்னையில்...தில்லாலங்கடி குடிநீர் பணிகளை அரைகுறையாக முடிக்க முயற்சி
ADDED : ஆக 19, 2025 12:39 AM

சென்னை :கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு காணாமல், ரெட்டேரியை சென்னையின் குடிநீர் ஆதாரமாக்கும், 40 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அரைகுறையாக முடிக்க, நீர்வளத் துறை மும்முரம் காட்டுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. திட்டத்தின் நோக்கத்தை சீரழிக்கும் செயல் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மற்றும் கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி மூலம், சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை, 1 டி.எம்.சி.,யாக உள்ளது. தற்போது, சென்னை குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரை தவிர, கேன் குடிநீரையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.
எனினும், சென்னையின் குடிநீர் தேவை 2030ம் ஆண்டிற்குள், 2 டி.எம்.சி.,யாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளை, குடிநீர் ஆதாரமாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.
ரூ.40 கோடி அ.தி.மு.க., ஆட்சியில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வாய் கண்டிகை ஏரி உருவாக்கப்பட்டது. மாதவரம் ரெட்டேரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கரைகளை பலப்படுத்துதல், துார்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முறையாக செய்யாததால், அ.தி.மு.க., ஆட்சி முடிவதற்குள் ஏரியின் கரைகள் சரிந்தன. புயலால் சரிந்து விழுந்ததாக கணக்கு காட்டப்பட்டது.
தற்போது, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ரெட்டேரியை துார்வாரி, சென்னையின் குடிநீர் ஆதாரமாக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு துவங்கிய இப்பணிகளை, நடப்பாண்டு செப்., 30க்குள் முடிக்க, அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. பணிகள் முடிந்தால், ஏரியில், 0.62 டி.எம்.சி., அளவிற்கு நீரை சேமிக்க முடியும்.
இந்த ஏரியை, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை இரண்டு பிரிவாக பிரிக்கிறது. இதில், ஒருபகுதியில் துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் மூன்று இடங்களில் செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
முள்வேலி அமைத்தல், நடைபாதை கற்கள் புதைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மற்றொரு பகுதியில் இன்னும் துார்வாரும் பணி துவங்கப்படவில்லை.
ஏரியைச் சுற்றி தனியார் மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மரக்கிடங்குகள், சிறு தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன.
அவகாசம் இவற்றில் இருந்து பல ஆண்டுகளாக கழிவுநீர் ரெட்டேரியில் நேரடியாக விடப்பட்டு வந்தது. ரெட்டேரி நீரை, சென்னை குடிநீருக்கு பயன்படுத்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ரசாயனம் அதிகம் கலப்பதால், பயன்படுத்த வாய்ப்பில்லை என தெரியவந்தது.
எனவே தற்போது, ரெட்டேரிக்கு வரும் கழிவுநீரை கட்டுப்படுத்தி, மழைநீரை மட்டும் சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏரிக்குள் கலக்கும் கழிவுநீரை தடை ஏற்படுத்த வேண்டும் என, நீர்வளத்துறை மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.
மாநகராட்சி வாயிலாக, ஏரியைச் சுற்றியுள்ள கட்டட உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டது. மருத்துவமனை கழிவுநீரை மறுசுழற்சி செய்து, அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக, உள்ளாட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், மறுசுழற்சி செய்த நீரை பயன்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வரவில்லை. அதன்பின், இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது. ஏரி சீரமைப்பு பணிக்கு வழங்கப்பட்ட அவகாசம், செப்டம்பரில் முடிவுக்கு வருகிறது. ஒரு மாத காலமே அவகாசம் இருப்பதால், ஏரியை முதல்வர் கையால் திறந்து வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ரெட்டேரியை துார்வாரும் பணி முழுமை பெறவில்லை. ஏரிக்குள் வரும் கழிவுநீரை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏரி பணியை அரைகுறையாக முடித்து, திறந்துவைத்து முழு திட்ட செலவிற்கான தொகையை பெறும் முயற்சிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
கழிவுநீர் கலப்பு பிரச்னையை சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பார்த்துக்கொள்ளட்டும் என்ற முடிவிற்கு, நீர்வளத்துறையினர் வந்துவிட்டனர்.
இதனால், ரெட்டேரியில் தேங்கும் வடகிழக்கு பருவமழை நீரை, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீர்வு காண ஆலோசனை ரெட்டேரி மேம்பாடு பணிகள் பெருமளவு முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க உள்ளோம். கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி, குடிநீர் வாரியத்துடன் ஆலோசித்து வருகிறோம். - நீர்வளத்துறை அதிகாரிகள்
வல்லுநர் குழு ஆய்வு அவசியம் ரெட்டேரியில் ரசாயனம் கலந்த நீர் அதிகம் கலந்து வருகிறது. எனவே, சுற்றுச்சூழல் துறை மட்டுமின்றி, சென்னை ஐ.ஐ.டி., - அண்ணா பல்கலை வல்லுநர் குழுவை கொண்டு, ஏரியில் தேங்கும் தண்ணீரை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகே, சென்னையின் குடிநீர் தேவைக்கு ஏரியை பயன்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை முடியும் வரை காத்திருந்து அதன்பிறகே, பணிக்கான முழுதொகையையும் அரசு விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அரைகுறையாக பணிகள் முடிந்ததாக நிதியை விடுவித்தால், மக்களின் வரிப்பணம்தான் வீணாகும். -டி.சடகோபன் தலைவர், தமிழக முற்போக்கு நுகர்வோர் மையம்.