எஸ்.ஐ.,யை வெட்ட பாய்ந்த ரவுடிக்கு கையில் ‘மாவுக்கட்டு’
எஸ்.ஐ.,யை வெட்ட பாய்ந்த ரவுடிக்கு கையில் ‘மாவுக்கட்டு’
UPDATED : நவ 07, 2026 04:51 PM
ADDED : நவ 07, 2026 04:46 PM

செங்குன்றம்: செங்குன்றம் எஸ்.ஐ.,யை பட்டாக்கத்தியால் வெட்ட பாய்ந்த ரவுடி தினேஷ், 28, போலீசாரிடம் தப்ப முயன்றபோது, வழுக்கி விழுந்து காயமடைந்தார். அடிபட்ட அவரது கைக்கு, ‘மாவுக்கட்டு’ போடப்பட்டுள்ளது.
செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் தெருவில், கடந்த 5ம் தேதி இரவு 10:00 மணியளவில், நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ், 28 என்ற ரவுடி, மது போதையில் பட்டாக்கத்தியுடன், பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டிருந்தார்.
தகவலறிந்த செங்குன்றம் காவல் நிலைய எஸ்.ஐ., செந்தில்குமார் அங்கு சென்று, ரவுடியை பிடிக்க முயன்றார். அப்போது தினேஷ், ‘என்னையே பிடிக்க வருகிறாயா; உன்னை சும்மா விட மாட்டேன்’ எனக்கூறி, பட்டாக்கத்தியால் வெட்ட பாய்ந்தார்.
சுதாரித்த உதவி ஆய்வாளர் செந்தில்குமார், ரவுடியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தன் பெல்ட்டை கழற்றி சுழற்றி தப்பினார். இதையடுத்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு ரவுடி தினேஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், போலீசாரிடம் தப்பிக்க முயன்ற தினேஷ், கீழே விழுந்து காயமடைந்தார். எலும்பு முறிவு ஏற்பட்ட அவரது கைக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது. சிகிச்சைக்கு பின், அவரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.
