/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செல்ல பிராணிகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த 6 இடத்தில் சிறப்பு முகாம்
/
செல்ல பிராணிகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த 6 இடத்தில் சிறப்பு முகாம்
செல்ல பிராணிகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த 6 இடத்தில் சிறப்பு முகாம்
செல்ல பிராணிகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த 6 இடத்தில் சிறப்பு முகாம்
ADDED : நவ 07, 2025 12:18 AM
சென்னை: செல்ல பிராணிகளுக்கு, 'மைக்ரோ சிப்' பொருத்தவும், பதிவு எளிதாக்க வசதியாகவும், ஆறு இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் செல்ல பிராணிகளை வளர்ப்போர், பதிவு செய்து உரிமம் பெறாவிட்டால், 5,000 அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து, செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணைய தளம் வாயிலாக பதிவு செய்ய முயல்கின்றனர்.
ஆனால், எத்தனை முறை முயன்றாலும், இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை; செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம் நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, செல்ல பிராணிகள் பதிவை எளிதாக்குவதற்கான சிறப்பு முகாமை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், செல்ல அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்படும்.
அதன்படி, திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய ஆறு இடங்களில், வரும் 9, 16 மற்றும் 23ம் தேதிகளில், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாம் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். முகாமில், மைக்ரோசிப் பொருத்தப்படும், தடுப்பூசி போடப்படும். அத்துடன், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்படும். மைக்ரோசிப் பொருத்தும்போது தரும் ஆவணங்களை வைத்து, எளிதாக பதிவு உரிமம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திக்கு தெரியாமல் சுற்றும்
10,000 வளர்ப்பு நாய்கள்
மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் பெரும்பாலானோர் நாய், பூனை மற்றும் சில பறவைகளையும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். ஆசைப்பட்டு வெளிநாட்டு இன வகை நாய்களை வாங்கி வளர்க்கின்றனர். பராமரிக்க முடியாமல், பலர் சாலையில் விட்டு விடுகின்றனர்.
வாடகை வீட்டில் வசிப்போரும், நாய்களை வளர்க்க முடியாமலும் கைவிடுகின்றனர். இந்த நாய்களால், தெருநாய்களுடன் ஒன்றிணைந்து வாழ முடியாது.
இந்த நாய்களை, தெருநாய்களும் கடித்து துரத்த நினைக்கும். இதுபோன்று வாழ வழி தெரியாமல், சென்னையில், 10,000க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் உலா வருகின்றன.
வளர்ப்பு நாய்களை கைவிடுவதை தவிர்க்கவே, அனைத்து செல்ல பிராணிகளையும் நவ., 24க்குள் பதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

