
சென்னை அணி
கால்பந்தில் தோல்வி
டாக்டர் சேவியர் பிரிட்டோ குழுமம், சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சேலஞ்சர் கோப்பை எனும் மாநில கால்பந்து போட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கிறது. 12 மாவட்ட அணிகள் நான்கு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த லீக் முதல் சுற்றில், திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி, 3 -1 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலியின் பி.எல்.டபிள்யூ.ஏ., பள்ளி அணியை வீழ்த்தியது.
அடுத்ததாக, மதுரை ஏ.சி., பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை டான்போஸ்கோ அணியை வீழ்த்தியது.
ஜோசப் கல்லுாரி அணி
கூடைப்பந்தில் 'சாம்பியன்'
அமிட்டி பிரீமியர் லீக் கூடைப்பந்து போட்டி, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதன் அரையிறுதி சுற்றில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி 48 - 35 என்ற கணக்கில் எத்திராஜ் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் விளையாடிய செயின்ட் ஜோசப் கல்லுாரி 59 - 47 என்ற கணக்கில் எம்.ஓ.பி., வைஷ்ணவா அணியை தோற்கடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது. சிறந்த வீராங்கனையாக, செயின்ட் ஜோசப் மாணவி கல்பிதா தேர்வானார்.
சிறுவர்களுக்கு
சதுரங்க போட்டி
ஸ்ரீ ஹயக்ரீவர் சதுரங்க அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில சதுரங்க போட்டி, சேலையூரில் உள்ள குகன்ஸ் பள்ளியில், 16ம் தேதி நடக்க உள்ளது. 8, 10, 13, 25 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் தனித்தனியாக பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், இன்று மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 72001 01544 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

