/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
/
பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
ADDED : செப் 26, 2025 02:30 AM
சென்னை :நெற்குன்றத்தில் பள்ளி மாணவர்கள், ஒப்பந்த ஊழியர் உட்பட நான்கு பேரை தெருநாய் கடித்த நிலையில், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறி நாய்க்கடி நோய்க்கான மருந்து இல்லாததால், அவர்கள் அவதிக்குள்ளாகினர்.
வளசரவாக்கம் மண்டலம், 148வது வார்டு கடம்பாடியம்மன் நகர், அய்யப்பா தெருவில் ஸ்ரீ சாஸ்தா மெட்ரிக்குலேஷன் பள்ளி அருகே, தெருநாய் ஒன்று குரைத்து கொண்டே, அவ்வழியே செல்வோரை நேற்று காலை துரத்தி வந்தது.
திடீரென, அப்பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவரை, அந்த நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதை பார்த்த அப்பள்ளியின் துாய்மை பணியாளர் ராணி, 60, நாயை விரட்டியபோது, அவரையும் கடித்தது.
பின், காலை 10:30 மணிக்கு, அச்சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சரசு, 47, என்பவரின் இடது காலிலும், அந்நாய் கடித்து குதறியது.
நாய்க்கடியால் பாதிக்கப் பட்டோர் உடனடியாக, 148வது வார்டு நெற்குன்றம் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு, நாய்க்கடிக்கான தடுப்பூசி இல்லாததால், சின்ன போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசியை போட்டு சிகிச்சை பெற்றனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி, பாம்பு கடிக்கான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
அவ்வாறு மருந்து கையிருப்பில் இல்லை என, யாரேனும் நிரூபிக்க நினைத்தால், எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், நானே விமான, ரயில், பேருந்து டிக்கெட் எடுத்து தருகிறேன் என, அடிக்கடி பேட்டி தந்தார்.
ஆனால், தமிழகத்தின் தலை நகர் சென்னை மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாய்க்கடிக்கான தடுப்பூசி இல்லாததால், ஒரே நேரத்தில் நாய்க்கடிக்கு நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அமைச்சர் சுப்பிர மணியன் என்ன பதில் சொல்லப் போகிறார் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.
தற்போது வரை, 60,000க் கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து நாய்களுக்கும் வெறிநோய் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பூசி போடப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
500 ஆக்ரோஷ நாய்களை
பராமரிக்க தனி காப்பகம்
தெரு நாய்களைப் பாதுகாக்கவும், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், நோய் பரவலைத் தடுக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் வேளச்சேரி மற்றும் மாதவரத்தில், 7.67 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, 500 நாய்களை வைத்து பராமரிக்க முடியும். ஒவ்வொரு இடத்திலும், 250 நாய்கள் தங்கவைக்கப்பட உள்ளன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களில், வெறி நோய் மற்றும் ஆக்ரோஷமான நாய்களை கண்டறிந்து, இந்த காப்பகத்தில் அடைக்கப்படும். குறிப்பாக, அதிக உமிழ்நீர் சுரத்தல், மீண்டும் மீண்டும் கடிக்கும் நாய்கள் ஆகியவை தமிழக விலங்கு நல வாரியத்தால் அடையாளம் காணப்படும். அவ்வாறான நாய்கள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும். நாய்களை பொறுத்தவரையில், 'ரேபிஸ்' தொற்று இருப்பது உறுதியானால், அது பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள் இறந்து விடும். இந்த நாய்கள் இறந்த பின் அடக்கம் அல்லது எரிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.