/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திடீர் மழையால் மின்வெட்டு; சாலைகளில் வெள்ளம் பரிதவிப்பு 20 விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
திடீர் மழையால் மின்வெட்டு; சாலைகளில் வெள்ளம் பரிதவிப்பு 20 விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திடீர் மழையால் மின்வெட்டு; சாலைகளில் வெள்ளம் பரிதவிப்பு 20 விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திடீர் மழையால் மின்வெட்டு; சாலைகளில் வெள்ளம் பரிதவிப்பு 20 விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
UPDATED : ஏப் 17, 2025 12:12 AM
ADDED : ஏப் 16, 2025 11:53 PM

சென்னை, வளி மண்டல சுழற்சி மற்றும் காற்று குவிதல் காரணமாக, சென்னையில் நேற்று காலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கி, தண்ணீர் உடனுக்குடன் வடிவதில் சிக்கல் ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தவிர, பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் பரிதவித்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு, வழக்கத்திற்கு மாறாக மேகமூட்டம் காணப்பட்டது.
ஒரு சில இடங்களில் காலை 8:30 மணி முதல் லேசான, மிதமான மழை துவங்கியது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திடீரென கனமழை கொட்டியது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையை எதிர்பார்க்காத மக்கள், திடீர் மழையால் செய்வதறியாமல், ஆங்காங்கே பேருந்து நிழற்குடை மற்றும் கட்டடங்களில், தஞ்சம் புகுந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், திடீர் சூறாவளி காற்று, கனமழை காரணமாக, மின் சாதனங்களில் மழைநீர் புகுந்து பழுது ஏற்பட்டதால், பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. பட்டாபிராம், ஜெ.ஜெ., நகர் சுற்றுவட்டார பகுதியில், இரண்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டது.
மின் வெட்டு குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'வெயிலால் மின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, மின் சாதனங்களில் முழு திறனில் மின்சாரம் செல்கிறது. பள்ளி பொதுத்தேர்வுகளால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, மின் சாதனங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை.
'அதிக வெப்பத்துடன் இருந்த, மின் கம்பியின் மீது, திடீரென மழைநீர் விழுந்ததாலும், மரக்கிளைகள் விழுந்ததாலும், சில இடங்களில் சாதனங்கள் பழுதாகின. அவை, உடனுக்குடன் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது' என்றனர்.
விமான சேவை பாதிப்பு
திடீர் மழை காரணமாக, மும்பை, ஹைதராபாத், குவஹாத்தி, பெங்களூரு, புனே உள்ளிட்ட இடங்களில் இருந்து, சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து கொண்டிருந்தன.
மும்பையில் இருந்து வந்த, ஏர் இந்தியா விமானமும், மதுரையில் இருந்து வந்த விமானமும், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னையில் இருந்து, கொச்சி, டில்லி, மும்பை, கோவை, தோஹா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன. மழை பெய்தாலும், எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தாலும், உடனுக்குடன் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டதால், சாலைகளில் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம் மற்றும் புழல் பகுதி சாலைகளில் தேங்கிய மழைநீரால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, 65வது வார்டு, லட்சுமி நகர் விரிவில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கியது.
இதேபோல், தாம்பரம் - வேளச்சேரி சாலையில் கிழக்கு தாம்பரம், சேலையூர், பெருங்களத்துார் திருவள்ளுர் தெரு, கார்த்திகேயன் நகர், பாலாஜி நகர், சாய் நகர், ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் தேங்கியது. இப்பகுதிகளில் முறையான வடிகால்வாய் இல்லாததால், தண்ணீர் தேங்கி, பாதிப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தை வளாகத்தில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியது. இதனால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அத்துடன், மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து கோயம்பேடு சந்தைக் செல்லும் 'பி' சாலையிலும், 'சி' சாலையிலும் மழைநீர் தேங்கியது.
பாம்பு புகுந்து பீதி
அமைந்தகரை காவல் நிலையம், பழைய 'ஆஸ்பெட்டாஸ்' கூரை கட்டடத்தில், வாடகையில் இயங்கி வருகிறது. இங்குள்ள குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில், நேற்று பெய்த மழைநீர் தேங்கியது. அதில், சிறிய அளவிலான தண்ணீர் பாம்பு வந்ததால், பெண் போலீசார் அலறியடித்து அங்கிருந்து ஓடி, போக்குவரத்து போலீசார் அறையில் தஞ்சமடைந்தனர்.
அதேபோல் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, அடையாறு, கள்ளிக்குப்பம், ஒரகடம், டன்லப், அம்பத்துார் தொழிற்பேட்டை, கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில், பல தெருக்களில் வெள்ளம் தேங்கியது. இதனால், வாகனங்கள் மெதுவாக இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மீது வளிமண்டல சுழற்சி நிலவியது. மன்னார் வளைகுடா பகுதிகளின் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது.
இந்த இரண்டு வளி மண்டல சுழற்சிகளால் காற்று குவிதல் நிகழ்ந்தது.
இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. இதன் காரணமாக இன்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- பா.செந்தாமரைகண்ணன்,
இயக்குனர்,
வானிலை ஆய்வு மையம்
மின்சாரம் பாய்ந்து சிறுவன் 'அட்மிட்'
அரும்பாக்கம், உத்தாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட், 35;
தனியார் நிறுவன் ஊழியர். இவரது, 9 வயது மகன், அதே பகுதியில் உள்ள தனியார்
பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி
முடிந்து, மங்கள் நகர் முதல் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது,
சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் கால் வைத்தபோது, மின்சாரம் தாக்கியதாக
கூறப்படுகிறது. சுருண்டு விழுந்த சிறுவன், தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். மின்சாரம் தாக்கியதா என்பது குறித்து,
அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.