/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
ADDED : ஜன 26, 2024 12:34 AM

தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது
வடபழனி ஆண்டவர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வந்த 5,000 குடம் பால், பெரிய பாத்திரத்தில் சேகரிப்பட்டு, 'ஸ்டீல்' குழாய் வழியாக அர்த்த மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
நேற்று அதிகாலை 5:30 மணி முதல் இரவு, 10:00 மணிவரை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர்.
கந்தக்கோட்டம்
பிராட்வே அடுத்த பூங்கா நகர் கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவிலில் மூலவர் கந்தசுவாமி, உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.
திருத்தணி
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தனக்காப்பு, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
பொதுவழியில் பக்தர்கள், ஆறுமணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரமும், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
வல்லக்கோட்டை
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், வள்ளிதேவிக்கு பச்சை குங்கும அலங்காரம், தெய்வானைக்கு சிவப்பு குங்கும அலங்காரத்திலும், உற்சவருக்கு 'ஓம்' எனும் பிரணவ மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.
தைப்பூசத்தன்று, பிரணவ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலம் இது ஒன்றே என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வந்து, சுவாமியை வழிபட்டனர்.
குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன், திருவான்மியூர் பாம்பன்சுவாமிகள் உட்பட பல கோவில்களில் தங்க ரதம், வெள்ளி ரதங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. பலர் மொட்டை போட்டு, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். ஏராளமான பக்தர்கள் கோவில் முகப்பில் அன்னதானம் செய்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு, மயிலை கபாலீஸ்வரர், பாரிமுனை கச்சாலீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ பெருமான், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றில், தெப்ப உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
- -நமது நிருபர்- -

