/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேயரிடம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தந்த 610 மனுக்கள் துாசு கூட தட்டலை...! மூன்று ஆண்டாகியும் மேஜையில் முடக்கிய அதிகாரிகள்
/
மேயரிடம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தந்த 610 மனுக்கள் துாசு கூட தட்டலை...! மூன்று ஆண்டாகியும் மேஜையில் முடக்கிய அதிகாரிகள்
மேயரிடம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தந்த 610 மனுக்கள் துாசு கூட தட்டலை...! மூன்று ஆண்டாகியும் மேஜையில் முடக்கிய அதிகாரிகள்
மேயரிடம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தந்த 610 மனுக்கள் துாசு கூட தட்டலை...! மூன்று ஆண்டாகியும் மேஜையில் முடக்கிய அதிகாரிகள்
ADDED : அக் 14, 2025 11:03 PM

பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில், மேயர் பிரியாவிடம் மக்கள் பிரதிநிதிகள் அளித்த 610 மனுக்கள், துாசு கூட தட்டப்படாமல், மூன்று ஆண்டுகளாக மாநகராட்சி உயர் அதிகாரிகளின் மேஜையில் துாங்கிக் கொண்டிருக்கும் விபரம் அம்பலமாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சுகாதாரம், துாய்மை, சாலை, வரி, வடிகால்வாய், உரிமம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. அந்தந்த துறைகளில் உள்ள அன்றாட பணிகளை, களப்பணியாளர்கள் முதல் துணை கமிஷனர்கள், கமிஷனர் வரை கவனிக்கின்றனர்.
இவர்களிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவித்து, தீர்வு காண்கின்றனர். தீர்வு கிடைக்காவிட்டால், மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டு, அவர்கள் வழியாக மனு கொடுப்பர்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, கவுன்சிலர்களின் தலைவராக மேயர் உள்ளார். அவரிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என, மக்கள் கருதுகின்றனர்.
அதுவும் நேரடியாக செல்வதை விட, கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி., வழியாக சென்றால், உடனடி தீர்வு கிடைக்கும் என, நம்புகின்றனர்.
இதனால் மக்களின் கோரிக்கைகளை, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் லெட்டர் பேடில், மேயருக்கு மனுக்களாக அனுப்புகின்றனர். இந்த வகையில், செப்., 2022 முதல் செப்., 2025 வரை, மூன்று ஆண்டுகளில், மேயரிடம், மக்கள் பிரதிநிதிகள் வாயிலாக, 6,210 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள், அந்தந்த துறைகள் மற்றும் மண்டலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு, நடவடிக்கை தொடர்பான உரிய பதிலை, 15 முதல் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு அனுப்பி, அதன் நகல் மேயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என, துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த வகையில், மேயர் அலுவலகத்தில் இருந்து, மூன்று ஆண்டுகளில், 5,600 மனுக்களுக்கான பதில், மக்கள் பிரதிநிதிகளான மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மீதமுள்ள 610 மனுக்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில், 370 மனுக்கள் மூன்று ஆண்டுகளாக, அந்தந்த துறைகளில் துாங்குகின்றன.
இதுகுறித்து, மக்கள் பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக நாங்கள் கொடுத்த மனுக்கள் மீது, இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உரிய பதிலும் தரவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்கள் கேள்வி கேட்டால் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
இதுகுறித்து மேயரிடம் கேள்வி எழுப்பினோம். இதனால் கோபமடைந்த மேயர், அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உரிய பதிலை விரைவில் அனுப்ப வேண்டும் என, செயலர் வழியாக, அனைத்து துறை உயர் அதிகாரிகள், மண்டல அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் கூறினர்.
மக்கள் பிரதிநிதிகள் அளித்த மனுக்களுக்கே இந்த நிலை என்றால், பொதுமக்கள் அளித்த மனுக்கள் என்னவாகி இருக்கும்; குப்பைக்கூடைக்காவது போயிருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பொதுமக்கள் நேரடியாக தரும் சில மனுக்கள் மீது, துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் மனுக்கள் மீது நடவடிக்கை முடியாத நிலை ஏற்படும். அதுபோன்ற பிரச்னைகள் குறித்து, கவுன்சிலர், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் வழியாக மீண்டும் மனு அனுப்புவர்.
அந்த கடிதத்தை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். அவர்கள், நடவடிக்கை எடுக்க முடியாத மனுவாக உள்ளதால், கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். அதுபோன்ற மனுக்கள் தான் அதிகமாக உள்ளன.
எதுவாக இருந்தாலும், உரிய பதிலை மேயர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். கடிதம் அனுப்பி நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -