/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியில் மண்டலம் பிரிப்பு பணியை...கைவிடுகிறது! நிதி பற்றாக்குறையால் விரிவாக்கமும் இல்லை
/
மாநகராட்சியில் மண்டலம் பிரிப்பு பணியை...கைவிடுகிறது! நிதி பற்றாக்குறையால் விரிவாக்கமும் இல்லை
மாநகராட்சியில் மண்டலம் பிரிப்பு பணியை...கைவிடுகிறது! நிதி பற்றாக்குறையால் விரிவாக்கமும் இல்லை
மாநகராட்சியில் மண்டலம் பிரிப்பு பணியை...கைவிடுகிறது! நிதி பற்றாக்குறையால் விரிவாக்கமும் இல்லை
ADDED : அக் 29, 2024 12:06 AM

சென்னை மாநகராட்சியில் சட்டசபை தொகுதி வாரியாக மண்டலம் பிரிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், புறநகரில் உள்ள சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டமும், நிதி பற்றாக்குறையால் கைவிடப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., பரப்பளவில், 200 வார்டுகளை கொண்டு உள்ளது. மிகவும் பழமையான சென்னை மாநகராட்சியின் அருகே உள்ள சுற்றுலா தலங்கள், பிரதான கோவில் அமைந்துள்ள பகுதிகளையும், இந்த மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள, ஸ்ரீபெரும்புதுார், திருப்போரூர், பூந்தமல்லி, பொன்னேரி உட்பட, 50 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக, தற்போதுள்ள 200 வார்டுகளை, 300 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திட்டப்பணி
அதேநேரம், ஏற்கனவே, 2011ம் ஆண்டில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது தான், திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
அதாவது தென் சென்னையில் கோவளம் ஒருங்கிணைந்த வடிகால், வடசென்னையில் கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த வடிகால் பணிகள் என, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதேபோல், குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவையும், 'ஜைகா, உலக வங்கி' உள்ளிட்ட நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால், சென்னை மாநகராட்சியை தற்போது விரிவாக்கம் செய்யும் திட்டம் இல்லை என, நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
மறுவரையறை
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்வதற்கான பூர்வாங்க பணிகள் நடந்தன. ஆனால், தற்போது மாநகரட்சிகளாக இருக்கும் பகுதிகளில், உட்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெறாமல் உள்ளது.
இந்நிலையில், மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டால், அப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதி செய்ய குறைந்தது, 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். உட்கட்டமைப்புக்கான நிதியும் இல்லாததால், விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.
அதேபோல், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலம் பிரிப்பதற்கான பணிகள் நடந்தன. தற்போது, சட்டசபை தொகுதி வாரியாக பிரித்துவிட்டால், பின்னாளில் சட்டசபைகள் மறுவரையறை செய்யும்போது, மீண்டும் மண்டலங்களை பிரிக்க வேண்டி வரும்.
எனவே, சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்களை பிரிக்கும் பணியையும் கைவிடுகிறோம். தற்போது, பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -