/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரை வாடகைக்கு எடுத்து அடகு வைத்த ஓட்டுனரை கடத்திய உரிமையாளர் கைது
/
காரை வாடகைக்கு எடுத்து அடகு வைத்த ஓட்டுனரை கடத்திய உரிமையாளர் கைது
காரை வாடகைக்கு எடுத்து அடகு வைத்த ஓட்டுனரை கடத்திய உரிமையாளர் கைது
காரை வாடகைக்கு எடுத்து அடகு வைத்த ஓட்டுனரை கடத்திய உரிமையாளர் கைது
ADDED : அக் 12, 2024 12:43 AM

ஆவடி, வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 28. சொந்தமாக 15 கார்களை வைத்து 'டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கார் ஓட்டுநர் தேவை என ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.
இதை பார்த்து, ஆவடி கோவில்பதாகை, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த டில்லிராஜ், 29, என்பவர், அவரிடம் பேசி 'மாருதி வேகனார்' காரை வாடகைக்கு எடுத்து, ஓராண்டாக சென்னையில் ஓட்டி வந்துள்ளார்.
கடந்த மே மாதம், பிரசாந்துக்கு தெரியாமல் கோயம்பேடில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், டில்லிராஜ் காரை அடகு வைத்துள்ளார். மேலும், இரு மாதங்களாக வாடகை பணம் தராமல், பிரசாந்தை ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பிரசாந்த், கடந்த 7ம் தேதி, டில்லிராஜ் வீட்டிற்கு சென்று, அவரது தாய் யமுனாவிடம் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார். பின், ஆவடி ரயில் நிலையம் அருகே இருந்த டில்லிராஜை, 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' காரில், பிரசாந்த் வேலுாருக்கு கடத்தி சென்றார்.
இதையடுத்து தாய் யமுனா, 1.20 லட்சம் ரூபாய் கொடுத்து, காரை மீட்க சென்றபோது, கார் சவாரி சென்றதாகவும், 14ம் தேதி தான் காரை திருப்பி கொடுக்க முடியும் எனவும், நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
இந்த தகவலை பிரசாந்த்திடம் அவர் கூறிய போது, 'காரை திருப்பி கொடுத்தால் தான், மகனை திருப்பி அனுப்ப முடியும்' என, பிரசாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யமுனா, நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, தன் மகனை கடத்தி விட்டதாக அவசர எண் '100'க்கு அழைத்து, புகார் தெரிவித்தார்.
தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், மொபைல் போனில் பிரசாந்த் திடம் பேசி, காட்பாடி, திருவலம் காவல் நிலையத்திற்கு இருவரையும் வரவழைத்தனர்.
அங்கு சென்று டில்லிராஜை மீட்ட போலீசார், பிரசாந்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.