/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணி அமைச்சர் இரண்டு முறை 'விசிட்' செய்தும் பயனில்லை
/
கிடப்பில் அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணி அமைச்சர் இரண்டு முறை 'விசிட்' செய்தும் பயனில்லை
கிடப்பில் அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணி அமைச்சர் இரண்டு முறை 'விசிட்' செய்தும் பயனில்லை
கிடப்பில் அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணி அமைச்சர் இரண்டு முறை 'விசிட்' செய்தும் பயனில்லை
UPDATED : பிப் 04, 2026 09:00 AM
ADDED : பிப் 04, 2026 05:58 AM

வளசரவாக்கம்: அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணி, அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அமைச்சர் இருமுறை ஆய்வு செய்தும் எந்த பயனுமில்லை என, பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. கோவிலை ஒட்டி, 1.87 ஏக்கரில் அமைந்துள்ள பரப்பளவில் திருக்குளம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்பட்டது.
இது குறித்து நம் நாளிதழில் வெளியான தொடர் செய்திகளை அடுத்து மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு, 87 லட்சம் ரூபாயில் குளத்தை துார் வாரி, கரையமைத்து, நடைபாதை மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒப்பந்தப்படி, 2021 செப்., 30ம் தேதிக்குள் பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் பாதியில் தடைபட்டன.
மீண்டும் 2022ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி, கோவில் குளத்தில் மழைநீர் வடிகாலில் இருந்து அகற்றப்பட்ட கழிவுநீர் கலந்த மண்ணை கொட்டி நிரப்புவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, அடுத்த நாளே ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குளத்தை ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சியும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து குளத்தை சீரமைப்பதாக, உறுதியளித்தார்.
அமைச்சர் ஆய்வு செய்து ஒன்றரை ஆண்டுகளை கடந்தும், குளம் சீரமைப்பு பணிகள் துவங்கப்படவில்லை. இதுகுறித்தும் நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, 2.99 கோடியில், குளத்தை முழுமையாக சீரமைத்து, நடைபாதை மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்படும் எனவும், அந்த பூந்தோட்டத்தில் பறிக்கப்படும் பூக்கள் கோவிலில் பயன்படுத்தப்படும் என, அமைச்சர் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், 2024 பிப்., 1ம் தேதி குளம் சீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, மண்டலக் குழுத் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, குளம் துார்வாரும் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், அதன்பின் சுற்றுச்சுவர் மற்றும் கரை அமைக்கும் பணிகள் மந்தமாக நடந்த நிலையில், தற்போது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. குளம் சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் வராததால், ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்தியதாக தெரிய வருகிறது.
இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். சமீபத்தில் அ.ம.மு.க., சார்பில் மாவட்ட செயலர் லக்கி முருகன் மற்றும் 148வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன் ஆகியோர், குளத்தில் பொம்மை ஆமை விடும் நுாதன போராட்டம் நடத்தினர்.
'இன்னும் ஒரு மாதத்திற்குள் குளம் சீரமைப்பு பணிகள் மீண்டும் துவங்காவிட்டால், நிதி திரட்டும் நோக்கில் குளம் அருகே சாலையில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என அ.ம.மு.க.,வினர் தெரிவித்தனர்.

