/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாலையில் வீட்டின் பூட்டுடைத்த திருடன் சாமர்த்தியமாக சிக்க வைத்த மேல்வீட்டுக்காரர்
/
அதிகாலையில் வீட்டின் பூட்டுடைத்த திருடன் சாமர்த்தியமாக சிக்க வைத்த மேல்வீட்டுக்காரர்
அதிகாலையில் வீட்டின் பூட்டுடைத்த திருடன் சாமர்த்தியமாக சிக்க வைத்த மேல்வீட்டுக்காரர்
அதிகாலையில் வீட்டின் பூட்டுடைத்த திருடன் சாமர்த்தியமாக சிக்க வைத்த மேல்வீட்டுக்காரர்
ADDED : ஏப் 08, 2025 01:21 AM

முகப்பேர்,
முகப்பேர் கிழக்கு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கென்னடி, 52; சென்னை உயர் நீதிமன்ற ஊழியர். இவர் கடந்த 5ம் தேதி, குடும்பத்துடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றிருந்தார்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில் சத்தம் கேட்டு எழுந்து, அதே குடியிருப்பின் முதல் தளத்தில் வசிக்கும் மோகன பிரியன் என்பவர், வீட்டின் வெளியே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, கென்னடியின் வீட்டு கதவின் பூட்டை மர்ம நபர் ஒருவர் உடைத்து உள்ளே செல்வதை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். ஆனால், சத்தம் எழுப்பாமல் சாமர்த்தியமாக திருடன் வீட்டிற்குள் சென்றவுடன், தன் வீட்டின் இரும்பு பூட்டால், கென்னடியின் வீட்டின் வெளிபுற இரும்பு கதவை பூட்டியுள்ளார். மேலும், ஜெ.ஜெ.நகர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.
அதேவேளையில், தான் அகப்பட்டதை அறியாத திருடன், சாவகாசமாக பீரோவை உடைத்து, அதிலிருந்த நகைகளை எடுத்து கொண்டு வெளியேற முயன்றார். அப்போது, இரும்பு கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பகுதிவாசிகளிடம் மாட்டி கொண்டதை அறிந்தவர், வீட்டு கதவை உள்பக்கமாக தாழிட்டார். அதேவேளயைில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்றபோது வீடு அமைதி கடலாக இருந்துள்ளது. போலீசார் வீடு முழுதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது, வீடு புகுந்து திருடிய நபர் படுக்கை அறையில் உள்ள கட்டிலின் அடியில், பதற்றத்துடன் பதுங்கியிருப்பது தெரிந்தது.
போலீசார் அவருக்கு கைவிலங்கு மாட்டி, கட்டிலின் அருகில் அமர வைத்து விசாரித்தனர். பின், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற ஓட்ட பாலா, 27, என்பதும், அவர் மீது திருட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. ஜெ.ஜெ.நகர் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

