/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புறநகரில் போதிய பணிமனை இல்லை கூடுதல் பஸ்கள் இயக்குவதில் சிக்கல்
/
புறநகரில் போதிய பணிமனை இல்லை கூடுதல் பஸ்கள் இயக்குவதில் சிக்கல்
புறநகரில் போதிய பணிமனை இல்லை கூடுதல் பஸ்கள் இயக்குவதில் சிக்கல்
புறநகரில் போதிய பணிமனை இல்லை கூடுதல் பஸ்கள் இயக்குவதில் சிக்கல்
ADDED : நவ 30, 2024 12:38 AM
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட மாநகர பஸ்களில், தினமும் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
மத்திய பணிமனை, தி.நகர், அடையார், தாம்பரம், வியாசர்பாடி, வடபழனி, அம்பத்துார், மாதவரம் உட்பட, 32 பணிமனைகளில், மாநகர பஸ்கள் பராமரித்து இயக்கப்படுகின்றன.
சென்னையின் எல்லை பகுதி, நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு, மகாபலிபுரம், திருவள்ளூர் என புறநகர் பகுதிகளுக்கும், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், போதிய மாநகர பஸ்கள் இயக்குவதில்லை. புறநகர் பகுதிகளில் கூடுதல் பணிமனைகள் இல்லாததால், பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்குவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், பஸ்களின் தேவை அதிகமாக உள்ளது.
அதேநேரம், போதிய அளவில் பணிமனைகள் இல்லாததால், கூடுதல் பஸ்களை இயக்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
சென்னையின் உட்பகுதியில் இருந்து, அதாவது, தாம்பரம், பூந்தமல்லி, எண்ணுார், மாதவரம், பெரும்பாக்கம் பணிமனைகளில் இருந்து, பஸ்களை எடுத்து சென்று இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல், இரவு 9:00 மணிக்கே, பணிமனைகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் செலவு அதிகமாகிறது. திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, மகாபலிபுரத்தில் பணிமனைகளை அமைத்தால், கூடுதல் பஸ்களை இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தையூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மற்றும் குத்தம்பாக்கம் புது பஸ் நிலையத்திலும் பணிமனைகள் அமைக்க உள்ளோம். இதற்கான, பணிகள் நடந்து வருகின்றன' என்றனர்.