/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாங்காக்கில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது: சினிமா துறையினருக்கு வினியோகம் செய்தது அம்பலம்
/
பாங்காக்கில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது: சினிமா துறையினருக்கு வினியோகம் செய்தது அம்பலம்
பாங்காக்கில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது: சினிமா துறையினருக்கு வினியோகம் செய்தது அம்பலம்
பாங்காக்கில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது: சினிமா துறையினருக்கு வினியோகம் செய்தது அம்பலம்
ADDED : நவ 13, 2024 02:23 AM

சென்னை:சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு டி.எஸ்.பி., குமரன் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை கண்காணிப்பில் இருந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து அதிகாலை 5:15 மணிக்கு வந்த, புழலைச் சேர்ந்த பாரூக், 27, என்ற பயணியையும் அவரை சந்திக்க காத்திருந்த, கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது யூசுப், 38; ஆருண், 34, ஆகியோரை பிடித்தனர்.
அப்போது, பாரூக்கின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில், சாக்லெட் வடிவில், 1.50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இது, ஹைட்ரோபோனிக்ஸ் என்ற முறையில் பயிரிடப்பட்ட கஞ்சா என்பதும், தாய்லாந்தில் உள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் அல் அமீன் என்பவரிடம் இருந்து, கஞ்சாவை வாங்கி வந்து, சென்னையில், சினிமா துறையைச் சேர்ந்தோருக்கு வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உயர் ரக கஞ்சா மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்.
மடிப்பாக்கம்
மடிப்பாக்கத்தை அடுத்த வேளச்சேரி நியூ காலனி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் பிரெய்னோட், 24. ஆதம்பாக்கம், பெரியார் நகர், 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 24. இருவரும் நண்பர்கள்.
இவர்கள், அம்பத்துாரில் உள்ள, 'காஸ்மோ ஒன் மெடிக்கல் பில்லிங்' என்ற தனியார் நிறுவனத்தில, ஓராண்டாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, திருச்சி, பச்சைமலையைச் சேர்ந்த பிரதீப், 27 அறிமுகமானார்.
மூவரும் கடந்த 2ம் தேதி, பெங்களூரு சென்று, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம், 10 கிராம் மெத் ஆம்பெட்டமைன் வாங்கி, சென்னை திரும்பினர்.
தகவல் அறிந்த தனிப்படை போலீசார், நேற்று முன்தினம், அஸ்வின் பிரெய்னோட், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வீட்டிற்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, மடிப்பாக்கம் பஜார் சாலை, ஆர்ஆர்.சாலுபிரியா குடியிருப்பிற்கு சென்ற போலீசார், அங்கே பதுங்கியிருந்த பிரதீப், வில்லிவாக்கம், பஜனை கோவிலை சேர்ந்த சாபுதீன், 24, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த 23 கிராம் கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். நான்கு பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.