/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறி கட்டிய அபார்ட்மென்டில் மூன்று வீடுகளுக்கு 'சீல்' வைப்பு
/
விதிமீறி கட்டிய அபார்ட்மென்டில் மூன்று வீடுகளுக்கு 'சீல்' வைப்பு
விதிமீறி கட்டிய அபார்ட்மென்டில் மூன்று வீடுகளுக்கு 'சீல்' வைப்பு
விதிமீறி கட்டிய அபார்ட்மென்டில் மூன்று வீடுகளுக்கு 'சீல்' வைப்பு
ADDED : ஆக 19, 2025 12:47 AM

சென்னை, ஆக. 19-
விதிமீறி கட்டிய தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், முதற்கட்டமாக மூன்று வீடுகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர்.
அண்ணா நகர் மண்டலம், 105வது வார்டில், அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவில், 'மார்டின் என்கிளவ்' என்ற பெயரில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இரண்டு தளங்களில், ஆறு வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசிக்கும் நளனி என்பவர், 2019ல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தனக்கு சொந்தமான குடியிருப்பு வரைபடத்தில், கீழ் தளத்தில் 'பார்க்கிங்' இருப்பதாகவும், அந்த இடத்தில் கிரேஸ் என்பவர் வீடு கட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், கிரேஸ் தரப்பிலும், தான் வசிக்கும் இடத்திற்கும் வரைபடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி, 2019ல் மாநகராட்சி ஆய்வு செய்தபோது, அடுக்குமாடி குடியிருப்புகள் முழுதும் முறைகேடாக வரைபடம் தயாரித்து, விதிமீறி கட்டடம் கட்டியதோடு, அதை விற்பனை செய்திருப்பது தெரிந்தது.
தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 'சீல்' வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, ஆறு குடியிருப்பாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி, வீடுகளை காலி செய்ய அறிவுறுத்திய மாநகராட்சி அதிகாரிகள், முதற்கட்டமாக தரைதளத்தில் உள்ள மூன்று வீடுகளுக்கு நேற்று 'சீல்' வைத்தனர். மேல் தளத்தில் உள்ள வீடுகளை அடுத்த வாரம் காலி செய்ய உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.