/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும் அதிகாரிகள் மும்முரம்
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும் அதிகாரிகள் மும்முரம்
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும் அதிகாரிகள் மும்முரம்
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியும் பணி துவக்கம்! ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும் அதிகாரிகள் மும்முரம்
ADDED : மார் 01, 2024 12:01 AM

லோக்சபா தேர்தலையொட்டி, சென்னையில் பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் கண்டறியும் பணியில், காவல் துறையுடன் இணைந்து மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. மொத்தமுள்ள, 4,676 ஓட்டுச்சாவடிகளில், கடந்த தேர்தல்களில் குறைவான ஓட்டுப்பதிவான பகுதிகளில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதன்படி, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என, மூன்று லோக்சபா தொகுதிகள் வருகின்றன.
இவற்றில், வடசென்னையில் கூடுதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென் சென்னையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியும் இணைகின்றன.
சென்னையில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளில், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள், வரும் தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 4,676 ஓட்டுச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் சென்னையில், 157 ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை; 330 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்டன. அங்கு, 'சிசிடிவி' கேமரா, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோல், 2021 சட்டசபை தேர்தலில், 30 மிகவும் பதற்றமானவை; 550 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்டன.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை மாவட்டத்தில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான இடங்கள் கண்டறியும் பணியில், மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், மற்ற மாவட்டங்களைவிட குறைவான ஓட்டுகளே பதிவாகின.
இதற்கான காரணத்தை கண்டறிந்து, அப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் துவக்க உள்ளனர்.
இது குறித்து, சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனரும், மாவட்ட தேர்தல் கூடுதல் அதிகாரியுமான லலிதா கூறியதாவது:
சென்னையில் கடந்தகால பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் அடிப்படையில், வரும் தேர்தலுக்கான பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பதற்றமான ஓட்டுச்சாவடி கண்டறியும் இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்துதல், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்துதல் போன்றவை நடைபெறும்.
மேலும், குறைந்த ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, மக்களுக்கு வாகனங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வரும் தேர்தலில் சென்னையில், 4,676 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன. அவற்றில், 48.36 லட்சம் பேர் வரை ஓட்டளிக்க உள்ளனர்.
அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல், ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதால், பெண்களுக்கான பிரத்யேக ஓட்டுச்சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

