/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடைக்காரரை தற்கொலைக்கு துாண்டியதாக இருவர் கைது
/
கடைக்காரரை தற்கொலைக்கு துாண்டியதாக இருவர் கைது
ADDED : அக் 01, 2025 02:42 PM
கீழ்ப்பாக்கம்:
- கடைக்காரரை தற்கொலைக்கு துாண்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கீழ்ப்பாக்கம், குட்டியப்பன் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பிராங்கோ, 47. இவரது மனைவி நசீமா, 44. தம்பதிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.
காயலான் கடை நடத்தி வந்த பிராங்கோ, கொரோனா காலகட்டத்திற்கு பின் கடையை மூடி விட்டு, சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
குடும்ப செலவுக்காக, நண்பர் முகுந்தன் உட்பட சிலரிடம், ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு, முறையாக வட்டி கட்ட முடியாமல் திணறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிராங்கோ, கடந்த 11ம் தேதி வீட்டில், எட்டு பக்க கடிதம் எழுதி வைத்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதில் 'கடன் கொடுத்தவர்களின் அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்' என, எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிராங்கோவின் மனைவி நசீமா, தலைமை செயலக காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிவில், பிராங்கோவை தற்கொலைக்கு துாண்டியதாக, அவருக்கு கடன் கொடுத்த, கீழ்ப்பாக்கம், சன்னியாசிபுரத்தைச் சேர்ந்த முகுந்தன், 43 மற்றும் டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், 26 ஆகியோரை, போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.