/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 கோடி நிலம் விற்பனை வழக்கில் இருவர் கைது
/
ரூ.2 கோடி நிலம் விற்பனை வழக்கில் இருவர் கைது
ADDED : நவ 16, 2025 02:55 AM

சென்னை: மடிப்பாக்கம் பகுதியில் போலி ஆவணம் வாயிலாக, 2 கோடி ரூபாய் நிலம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளிகள் இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தி.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 55; தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் இவர், கடந்த ஆக., மாதம், சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார்.
அதன் விபரம்:
எனக்கு சொந்தமான, மடிப்பாக்கம் பகுதியில் உள்ள, 4,715 சதுர அடி உடைய இரண்டு வீட்டு மனைகளை மோசடியாக அபகரித்துள்ளனர். சொத்து உரிமையாளராகிய நான் இறந்துவிட்டதாகவும், கே.கே.நகரைச் சேர்ந்த பிரியா என்ற ஆள்மாறாட்ட நபர் மட்டுமே வாரிசு என போலியான வாரிசு சான்றும் ஏற்படுத்தியுள்ளனர்.
இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள என் மனைகளை, வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணைக்கு பின், நில மோசடியில் ஈடுபட்ட கே.கே.நகரைச் சேர்ந்த குற்ற பின்னணி உடைய ராகேஷ், 36; மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 54; ஆகியோரை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த பிரியா, பாலசுந்தர ஆறுமுகம், சாலமன்ராஜ் ஆகியோரும் கைதாகினர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, போலியான தாய் பத்திரம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்களை தயாரித்து கொடுத்த, கொளத்துாரைச் சேர்ந்த பாரதிராஜா, 44; நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜஹபர் சாதிக், 42; ஆகியோர் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வீட்டில் இருந்து போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்திய பிரின்டர்கள், போலி ரப்பர் ஸ்டாம்புகள், முத்திரை தாள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

