/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தசாரதி கோவிலில் வரும் 10ல் வைகுண்ட ஏகாதசி
/
பார்த்தசாரதி கோவிலில் வரும் 10ல் வைகுண்ட ஏகாதசி
ADDED : ஜன 02, 2025 12:29 AM
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி 10ம் தேதி அன்று பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது.
முன்னதாக திருமொழி திருநாள் எனும் பகல் பத்து உற்சவம் கடந்த மாதம், 31ம் தேதி துவங்கியது. உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
இன்று முதல் வரும் 9ம் தேதி வரை முறையே காளிங்கநர்த்தனன், சக்ரவர்த்தித்திருமகன், ஏணிக்கண்ணன், பரமபதநாதன், பகாசூரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளிக்கண்ணன், நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசியான,10ம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு உள்பிரஹார புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 5:30 மணி முதல் இரவு 10:30 மணிவரை கட்டண தரிசனம் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 11:30 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நடக்கிறது.
இதையடுத்து, 11ம் தேதி துவங்கும் திருவாய்மொழித் திருநாள் எனும் இராப்பத்து உற்சவத்தில் வேணுகோபாலன், ரத்னாங்கி சேவை, திருவேங்கடமுடையான் கோலம், உற்சவர் முத்தங்கி சேவை, ராமமன்னார், கோவர்த்தனகிரி, சாற்றுமறை, இயற்பா சாற்றுமறை ஆகியவை நடக்கின்றன.