/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களால் மாநகராட்சிக்கு... ரூ.100 கோடி இழப்பு!:சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல் மோசடி
/
குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களால் மாநகராட்சிக்கு... ரூ.100 கோடி இழப்பு!:சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல் மோசடி
குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களால் மாநகராட்சிக்கு... ரூ.100 கோடி இழப்பு!:சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல் மோசடி
குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களால் மாநகராட்சிக்கு... ரூ.100 கோடி இழப்பு!:சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல் மோசடி
UPDATED : டிச 25, 2025 05:06 AM
ADDED : டிச 25, 2025 05:05 AM

சென்னை மாநகராட்சியின் விரிவாக்க மண்டலங்களில், 100 கோடிரூபாய்க்கு மேல் ஒப்பந்ததாரர்கள் சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் பதித்து, ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. 'டிட்வா' புயல், மழையால் சேதமடைந்த பல சாலைகள் சீரமைக்காதது குறித்து கேள்வி எழுப்பியதால், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது, 100 கோடி ரூபாய் தரும்படி, குடிநீர் வாரியத்திடம், மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான மணலி, மாதவரம், அம்பத்துார், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், குடிநீர் வாரியம் சார்பில், 2,600 கோடி ரூபாயில் கழிவுநீர், குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
![]() |
இத்திட்ட பணிகளுக்கு குழாய் பதிக்க, சாலை துண்டிப்பு கட்டணத்தை, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
அதாவது பேருந்து சாலை மற்றும் உட்புற சாலைகளின் தன்மையை பொறுத்து, சதுர மீட்டருக்கு, தார் சாலைக்கு 600 முதல் 8,017 ரூபாய்; கான்கிரீட் சாலைக்கு, 5,304 ரூபாய் வரை என, கி.மீ., துாரத்திற்கு, 50 முதல் 80 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
'டிட்வா' புயல்
ஆனால், பல மண்டலங்களில், சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல் குழாய், கேபிள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. குறிப்பாக, விரிவாக்க மண்டலங்களில், 150 கி.மீ., துாரத்திற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் சாலை துண்டிப்பு கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதும், இதனால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும், சமீபத்தில் பெய்த மழையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
'டிட்வா' புயல், மழையால், சென்னையின் பிரதான சாலைகள், உட்புற சாலைகளில் தண்ணீர் தேங்கி கடுமையாக சேதம் ஏற்பட்டது. பல பகுதிகளில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மண்டல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோது, சாலை துண்டிப்பு கட்டணத்தை குடிநீர் வாரியம் செலுத்தாதது தெரியவந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
குடிநீர், கழிவுநீர் திட்ட அதிகாரிகள், முறையாக பட்டியல் வழங்கி அனுமதி பெறுவதில்லை. அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் பெயரை கூறி அனுமதி கேட்கின்றனர். மற்ற பணிகளால், குடிநீர் வாரிய பணிகளை முறையாக கண்காணிக்க முடியவில்லை.
தவிர, சாலை துண்டிப்பு கட்டணத்தை வாரியம் செலுத்தாததால், 100 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சில மாநகராட்சி வார்டு பொறியாளர்களும், இச்செயலுக்கு உடந்தை.
மீண்டும் மதிப்பீடு தயாரித்து, குடிநீர் வாரியம் பணம் செலுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், பகுதிமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
அனுமதி பெற்று, சாலைகளில் குழாய் பதிக்க, பள்ளம் தோண்ட வேண்டும் என, ஒப்பந்த நிறுவனங்களிடம் வலியுறுத்தி உள்ளோம்.
அலட்சியம்
சில வி.ஐ.பி., தெருக்களில், 'அனுமதியை பின்னர் பெற்றுக்கொள்ளலாம், பணியை உடனே துவங்குங்கள்' என, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதால், பணிகளை செய்தோம்; சில இடங்களுக்கு அனுமதி பெற்றுள்ளோம்.
அதைக் காரணமாக வைத்து, சில ஒப்பந்த நிறுவனங்கள் உரிய கட்டணம் செலுத்தாமல், பல தெருக்களில் பள்ளம் தோண்டியுள்ளது. எங்கள் துறை சார்ந்த திட்ட பணி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், இந்த பிரச்னை ஏற்பட்டது.
இது போன்ற தவறுகள் இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்கள் கூறியதாவது: பொதுவாக பணி முடிந்தபின், பள்ளத்தில் மண் இறுகியதும் சாலை சீரமைக்கப்படும். பல மாதங்களாகியும் சீரமைக்காததால், மழையின்போது சகதியாக மாறி சாலைகளை பயன்படுத்த முடியவில்லை. வார்டு தோறும் அதிகாரிகள் இருந்தும், ஒப்பந்ததாரர்கள் சாலை துண்டிப்பு கட்டணத்தை செலுத்தவில்லை எனக்கூறுவது, மாநகராட்சி, குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலை உள்வாங்க இதுதான் காரணம்!
சாலையில் 1 மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டிய பின், மண் இறுகும் வரை தண்ணீர் ஊற்றி சமன்படுத்த வேண்டும். வாகனங்கள் செல்லும்போது மண் இறுகும். இதற்கு 15 நாட்கள் வரை ஆகும். மண் உள்வாங்கும்போது 10 செ.மீ., வரை, சிமென்ட், ஜல்லி கலவையால் சமன்படுத்த வேண்டும். அதற்கு மேல், 10 முதல் 15 செ.மீ., வரை 'எம் 15' கான்கிரீட் கலவையும், அதன் மீது 15 செ.மீ., வரை 'எம் 20' கான்கிரீட் கலவையும் கொட்டி சமன்படுத்த வேண்டும். அப்போது தான், சாலை உள்வாங்காமல் தரமாக இருக்கும். கனரக வாகனங்கள் செல்லும்போது, குழாய், கேபிள்கள் சேதமடையாமல், திடமாகவும் இருக்கும். ஆனால், குடிநீர் வாரிய ஒப்பந்த நிறுவனங்கள், பள்ளம் தோண்டி மண்ணை இறுக செய்யாமல், ஒரு வாரத்தில் சிமென்ட் சாலை போட்டு மூடுவதால், சாலை அமைத்த ஒரே வாரத்தில் சேதமடைவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். சாலை சீரமைப்பில், முறையான வழிகாட்டுதலும், கண்காணிப்பும் அவசியம்.
- நமது நிருபர் -:


