/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எல்லையை முடிவு செய்யாமல் கட்டட அனுமதி ஏன்? சதுப்பு நில விவகாரத்தில் குழப்பும் வனத்துறை
/
எல்லையை முடிவு செய்யாமல் கட்டட அனுமதி ஏன்? சதுப்பு நில விவகாரத்தில் குழப்பும் வனத்துறை
எல்லையை முடிவு செய்யாமல் கட்டட அனுமதி ஏன்? சதுப்பு நில விவகாரத்தில் குழப்பும் வனத்துறை
எல்லையை முடிவு செய்யாமல் கட்டட அனுமதி ஏன்? சதுப்பு நில விவகாரத்தில் குழப்பும் வனத்துறை
ADDED : அக் 30, 2025 01:09 AM
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் தல எல்லைக்குள் அடங்கும் பகுதிகளை வரையறுக்காமல், தனியாருக்கு கட்டுமான திட்டங்களை அனுமதிப்பது ஏன் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் எல்லை பகுதிக்குள், தனியார் நிறுவனத்தின், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான திட்டத்துக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சதுப்பு நிலம், ராம்சார் தலம் ஆகிய எல்லைக்குள் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த வனத்துறை, 'சதுப்பு நில எல்லைக்குள் கட்டட அனுமதி வழங்கவில்லை. அதே நேரம், ராம்சார் தல எல்லைக்குள் வரும் சர்வே எண்களை வரையறுக்கும் பணிகள் முடியாததால், இந்த எல்லையில் இருக்கும் தனியார் நிலங்களுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், தவறு இல்லை' என, தெரிவித்துள்ளது.
இந்த விளக்கம் பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காப்புக்காடாக உள்ளது. இப்பகுதி ராம்சார் தலமாக, 2022ல் அறிவிக்கப்பட்டது.
அப்போது, அதன் எல்லையில், 100 மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சதுப்பு நிலத்தில் இருந்து, 100 மீட்டர் வரையுள்ள பகுதிகளில், கட்டட அனுமதி வழங்க முடியாது.
ஆனால், ராம்சார் தலத்தின் எல்லையை சர்வே எண்கள் வாரியாக ஆய்வு செய்து இறுதி செய்ய உள்ளோம் என்று, வனத்துறை தற்போது தெரிவிக்கிறது.
கடந்த, 2022ல் இப்பகுதி ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை எல்லையை முடிவு செய்யாதது யார் தவறு.
எல்லையை வனத்துறை முடிவு செய்யாமல், அங்குள்ள தனியார் நிலங்களில் கட்டுமான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைகள் அனுமதிப்பதை வனத்துறை ஏற்றுக்கொள்வது சரியா என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தடை கோரி அ.தி.மு.க., வழக்கு
அ.தி.மு.க., சென்னை புறநகர் மாவட்ட செயலர் பிரெஷ்நேவ் என்பவர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் மனு தாக்கல் செய்துள்ள மனு:
பெரும்பாக்கம் கிராமத்தில், நான்கு பிளாக் கொண்ட பன்னடுக்கு குடியிருப்பு கட்ட, 'பிரிகேட்' நிறுவனம், கடந்த ஜன.,1ல் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இந்த உத்தரவு பெற்ற மூன்று நாட்களுக்குள், சதுப்பு நில பகுதி என தெரிந்தும், சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்துள்ளது. இது, சட்ட விரோதம்.
குப்பை கொட்டுவது, ஐ.டி., நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால், ஏற்கனவே சதுப்பு நிலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.
'ராம்சார்' தள பகுதிக்குள், 1 கி.மீ., சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானத்திற்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

