/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணி துவக்கம்
/
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணி துவக்கம்
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணி துவக்கம்
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணி துவக்கம்
ADDED : அக் 15, 2025 02:10 AM

சென்னை, தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்திற்கு, வெளிமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட உத்திரங்கள் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
அண்ணா சாலையில் உள்ள ஐந்து சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே, 3.20 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி, 620 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.
மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பாதிக்காத வகையில், முழுதும் இரும்பு துாண்கள் மற்றும் உத்திரங்களை பயன்படுத்தி மேம்பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, மேம்பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு துாண்கள் மற்றும் உத்திரங்கள், தமிழகம் மட்டுமின்றி குஜராத், தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் இரும்பு துாண்கள் பொருத்தும் பணிகள், ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளன. இங்கு உத்திரங்கள் பொருத்தும் பணிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துவங்கியுள்ளன. வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகளை, அமைச்சர் வேலு இரவில் பார்வையிட்டார். அப்போது, தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சரவணசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஒரு உத்திரம் 22 டன் எடை இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேம்பால துாண்களின் மேல் பொருத்தப்படும் ஒரு உத்திரம், 22 டன் எடை கொண்டது. குறுக்கு உத்திரம், 9 டன் எடை கொண்டது. ஒரு பால கண்ணுக்கு ஐந்து உத்திரங்கள் மற்றும் இரண்டு குறுக்கு உத்தரங்கள் வீதம், 110 டன் எடை கொண்ட இரும்பு கட்டமைப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிக எடை கொண்ட உத்திரங்களை துாக்கி பொருத்தும் பணிக்கு, 150 டன் எடை கொண்ட உயர்திறன் கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.