/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 மெட்ரோ பாதையை இணைக்கும் 'டபுள் டெக்டர் லைன்' பணி தீவிரம்
/
2 மெட்ரோ பாதையை இணைக்கும் 'டபுள் டெக்டர் லைன்' பணி தீவிரம்
2 மெட்ரோ பாதையை இணைக்கும் 'டபுள் டெக்டர் லைன்' பணி தீவிரம்
2 மெட்ரோ பாதையை இணைக்கும் 'டபுள் டெக்டர் லைன்' பணி தீவிரம்
ADDED : மார் 08, 2024 12:15 PM

சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பில், 116 கி.மீ., துாரத்திற்கு, 126 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாதவரம் - சோழிங்கநல்லுார் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் பாதைகள், சில இடங்களில் இணைகின்றன.
குறிப்பாக ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில், 'டபுள்டெக்டர் லைன்' எனப்படும், இரண்டு அடுக்கு மேம்பால பாதைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த டபுள் டெக்கர் லைன் 4 கி.மீ., துாரத்திற்கு அமைகிறது. இதற்காக, பிரத்யேக ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லுார் மற்றும் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடங்களில் ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் பகுதியில் நடக்கும் இரண்டு அடுக்கு மேம்பால பாதை பணி, மிகவும் சவாலான பணி.
ஒரே நேரத்தில் இந்த இரண்டு அடுக்கு மேம்பால பணி நடப்பதால், முழு கவனத்துடன் பணி மேற்கொண்டு வருகிறோம். நாட்டில் எந்த மெட்ரோவிலும், இதுபோன்ற பணியை இதுவரை மேற்கொள்ளவில்லை.
இங்கு இரண்டிலும், வெவ்வேறு வழித்தடங்களுக்கு செல்லும், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான துாண்கள் மீது, 140 மீட்டர் உயரம் மேம்பால பாதைகள் அமைத்து, 22 மீட்டர் நீளத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
இதற்கு, பிரத்யேக 'கிர்டர் லாஞ்சர்' வகை ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம்.
பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் வரை முதல் மெட்ரோ ரயில் சேவையை, வரும் 2026ல் துவங்க உள்ளோம்.
வரும் 2028ல், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

