/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை குடையாக... கொடையாக மாறும் மரங்கள்
/
பசுமை குடையாக... கொடையாக மாறும் மரங்கள்
ADDED : செப் 25, 2011 01:15 AM
''சூழலியல் என்பது உயிரினங்களுக்கும் அவற்றை சார்ந்துள்ள மற்ற காரணிகளுக்கும் இடையிலான உறவு முறையாகும்.
இவ்விரண்டும் ஒன்றை ஓன்று சார்ந்திருப்பதால், உயிரினங்களை சூழலில் இருந்து பிரிக்க முடியாது'' என்கிறார் சூழலியலுக்கான இலக்கணத்தை வகுத்த எர்னஸ்ட் ஹெக்கேல் என்ற அறிஞர்.உயிருள்ளவையும், உயிரற்றவையும் இணைந்திருக்கும் 'எக்கோ சிஸ்டம்' என்னும் சங்கிலியின் எந்த ஒரு கண்ணியில் பாதிப்பு நேர்ந்தாலும் அது ஒட்டு மொத்தமாக சங்கிலியின் வலுவையும் பாதிக்கும் என்ற இயற்கை விதியை உணர்ந்திருந்ததால்தான், நம் முன்னோர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த காலம் வரை சூழல் விதிகளை மீறவில்லை. பெரும் அறிவியல் சமூகமாக வளர துவங்கிய பிறகு, மனிதர்களில் ஒவ்வொரு நடவடிக்கையும் இயற்கைக்கு எதிரான செயலாகவே மாறின.அது இன்றைக்கு எல்லை கடந்து ஒட்டு மொத்த சுற்றுச்சூழலையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன வாழ்க்கை முறையில் இதைத் தவிர்க்க முடியாது என்று இனி யாரும் சமாதானம் கூற முடியாது. 'ஸ்டாக் ஹோம்' மாநாட்டில், (1972ம் ஆண்டு) மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேசும் போது, ''நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு சமுதாய நலன் சார்ந்தும் தொழில் மற்றும் வணிக தேவை சார்ந்தும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது எந்த வகையிலும் சூழலை பாதிக்காமல் நிறைவேற்ற வேண்டும். அதுதான் நிலைத்த வளர்ச்சியை உருவாக்கும்'' என்றார்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ செய்யாமல், மொத்த சமூகமும் இணைந்து செய்ய வேண்டும். அப்போதுதான் முழு வெற்றியை அடைய முடியும் என்ற நோக்கத்தோடு சிறுதுளி மற்றும் ராக் அமைப்புக்கள் இணைந்து, பசும்புலரி திட்டத்தின் மூலம் கிராமப்புரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை செய்து வருகிறன்றன. செலக்கரிச்சல், கீரணத்தம், மத்வராயபுரம் ஆகிய கிரமங்களை தொடர்ந்து இப்போது கரடிவாவி, ஆராக்குளம், பருவாய், வேப்பங்கொட்டை பாளையம், அய்யம்பாளையம், புளியம்பட்டி ஆகிய கிரமங்களில் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, இதற்கான துவக்க விழா கரடிவாவியில் நடந்தது. முதல் கட்டமாக 400 மரக்கன்றுகள் நடப்பட்டன; மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்த சிறுதுளி நிறுவன அறங்காவலர் வனிதாமோகன் பேசியதாவது:கிராமங்கள் என்றால் பசுமையாக இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், போதிய நீரதாரங்கள் இன்றி இன்றைக்கு பெரும்பாலான கிராமங்கள் வறட்சியில்தான் வாடுகின்றன. மழை பெய்தால்தான் தண்ணீர் என்ற நிலையில் கோவையில் பல கிராமங்களில் உள்ளன; இங்கு மழை நீரை சேமிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. பசும்புலரி திட்டத்தின் நோக்கமே பசுமையில்லா கிராமங்களில் பசுமை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இப்பணியை, நம் சந்ததிகளுக்கு செய்யும் கொடையாக கருதவேண்டும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பசுமை கனவு இதுதான்.இவ்வாறு, வனிதாமோகன் பேசினார். பசும்புலரியோடு திட்டத்தில் இணைந்து இப்பகுதியில் மரம் வளர்க்கும் பொறுப்பை கோவை சாய்சிட்டி ரோட்டரி சங்கம், ஆராக்குளம் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை, பருவாய் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், முத்தாண்டி பாளையம் சுதந்திர பறவைகள் நற்பணி மன்றம், புளியம்பட்டி பசுமை இயக்கம், எஸ்.எல்.என். எம்., பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஊராட்சி அமைப்புகள் இப்பகுதியில் 18 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள் ளன.ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மகளிர் திட்டத்தின் தலைவர் சுந்தரம் மற்றும் எஸ்.எல்.என்.எம். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.மரக்கன்று வேண்டுமா? பசும்புலரியில் இணைந்து செயல்பட விரும்புவோர், மரக்கன்றுகளை இலவசமாக பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய மொபைல் போன்: 9364515839,
இணையதளம்: www. greencoimbatore.com
- நமது நிருபர் -