/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல் கொசு ஒழிக்க 1,000 பணியாளர்கள் களம்
/
கோவையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல் கொசு ஒழிக்க 1,000 பணியாளர்கள் களம்
கோவையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல் கொசு ஒழிக்க 1,000 பணியாளர்கள் களம்
கோவையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல் கொசு ஒழிக்க 1,000 பணியாளர்கள் களம்
ADDED : செப் 02, 2024 01:23 AM
கோவை:கோவை நகர் பகுதியில், இரு வாரங்களாக, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனால், கொசு புகை மருந்து அடிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருவோர் விபரம் மருத்துவமனைகள் வாயிலாக பெறப்படுகிறது.
அவர்கள் வசிக்கும் பகுதிக்கு மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் சென்று, சுகாதாரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவரையும், அவரை சார்ந்துள்ளோரையும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். என்றாலும், இரு வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேநேரம், காய்ச்சல் பாதிப்புக்கு வருவோரில் சிலர் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல், மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி உட்கொள்வதால், டெங்கு காய்ச்சல் பாதிப்பின் வீரியம் வெளியே தெரிவதில்லை.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''கொசு ஒழிப்பு பணியில், 1,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் கேட் கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கப்படுகிறது. புதிய மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்படுகிறது.
டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுகாதாரக் குழுவினர் சென்று, மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கின்றனர். மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில், கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தால், அபராதம் விதிக்கிறோம்.
பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறோம். டெங்கு பாதிப்பு 'ரிப்போர்ட்' அதிகமாக பதிவாகிறது; உயிரிழப்பு இல்லை. எங்கெங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதென கணக்கெடுக்கிறோம். இதுதொடர்பாக, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.