/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
ADDED : ஏப் 13, 2024 12:10 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.
விடைத்தாள் திருத்த முகாம் அலுவலர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வள்ளியம்மாள் முன்னிலையில் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கல்வி மாவட்டத்தில், 55 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. அதில், ஒவ்வொரு குழுவிலும், முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வாளர் தலா ஒருவர், உதவித்தேர்வாளர்கள், 8 பேர், என மொத்தம், 10 பேர் உள்ளனர்.
50 முதன்மை தேர்வர்கள், 50 கூர்ந்தாய்வாளர்கள், 500 உதவித்தேர்வாளர்கள் மற்றும், மதிப்பீட்டு அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர், இப்பணியில் ஈடுபட உள்ளனர். முதல் நாளான நேற்று முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.
வரும் 15ம் தேதி முதல் உதவித்தேர்வாளர்களும் இப்பணியில் ஈடுபட உள்ளனர். 16, 17 மற்றும், 22, 23ம் தேதிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கின்றன,' என்றனர்.
உடுமலை
கடந்த, மார்ச், 26ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது; திருப்பூர் மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 881 பேர் பொதுத்தேர்வெழுதினர். கடந்த, 8ம் தேதி தேர்வு நிறைவடைந்தது.
தேர்வு மையங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள், மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையத்துக்கு, 10ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
விடைத்தாள் திருத்துதலின் போது, பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, ஏற்கனவே விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.திருப்பூர் ஜே.எம்.எச்.எஸ்., பள்ளி, தாராபுரம் சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர்; வரும், 15ம் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குவர்.
மாவட்டத்தில் ஒன்பது தாலுகாவில் இருந்து, 1,465க்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். வரும், 22ம் தேதி வரை இப்பணி நடக்கும். இம்மாத இறுதி வாரத்தில் மதிப்பெண் பதிவேற்றம் முடிக்கப்பட்டு, மே, 10ம் தேதி தேர்வுகள் முடிவுகள் வெளியாகுமென, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

