/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்பாளரை வரவேற்க தலைக்கு ரூ.200
/
வேட்பாளரை வரவேற்க தலைக்கு ரூ.200
ADDED : ஏப் 05, 2024 11:09 PM

கோவை தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நேற்று, திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் பகுதியில் பிரசாரம் செய்தார். அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோரும் உடன் வந்தனர். வேட்பாளரை வரவேற்பதற்காக சுய உதவிக் குழுவினர், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர்.
அவர்களது பெயர்களை கட்சியினர் குறித்துக்கொண்டனர். கட்சிக்கொடி, உதயநிதி, ஸ்டாலின் படங்களை கையில் கொடுத்து வரவேற்புக்காக நிறுத்தினர். ரூபாய் 200க்கு ஆசைப்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் வெயிலில் காத்திருந்தனர். வேட்பாளர் பிரசாரத்தை முடித்துவிட்டு அடுத்த ஊருக்கு சென்ற பின் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தலைக்கு, 200 வீதம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஒரு இடத்தில் கலந்து கொண்டவர்களை மற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் புதிய நபர்களை வரவேற்புக்காக நிறுத்தி வைத்திருந்தனர்.
அ.தி.மு.க.,வும் தாராளம்
நேற்றுமுன்தினம் அ.தி.மு.க., சார்பில் கோவையில் நடந்த கூட்டத்திற்கு பொங்கலுார் பகுதியில் இருந்து சுய உதவி குழு பெண்கள், 100 நாள் வேலைத் தொழிலாளர்களை அழைத்துச் சென்றிருந்தனர். அவர்களுக்கு, 200 ரூபாய் பணம் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.

