/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார்
/
பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார்
ADDED : ஏப் 17, 2024 12:53 AM
கோவை;தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கோவையில், பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் வரும், 19 ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும், தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணிகளை போலீசார் பலப்படுத்தியுள்ளனர்.
மாநகரில், 2,763 போலீசார், 800 ஊர்க்காவல்படையினர், 300 சிறப்பு போலீசார், 350 துணை ராணுவப்படையினர் என, 4,363 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
மாநகரில் லோக்சபா தேர்தலை அமைதியாக நடத்த தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் தவிர, 133 ரோந்து வாகனங்கள் இருக்கும். மேலும், 20 விரைவுப்படை குழுக்கள் பாதுகாப்பு பணியில் இருப்பர். ஓட்டுச்சாவடிகளில், ஏதாவது பிரச்னை என்றால் இக்குழுவினர் உடனடியாக அங்கு சென்று அதை சரிசெய்வர். இவர்களுடன் 10 அதிரடிப்படையினரும் பணியில் இருப்பர். தேர்தலை முன்னிட்டு, இதுவரை, 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரசாரம் நிறைவடைவதால், வெளியூரை சேர்ந்தவர்கள் கோவை லோக்சபா தொகுதியில் இருக்கக் கூடாது.
பிரசாரம் முடிந்தவுடன் அவரவர் ஊருக்கு செல்ல வேண்டும். வெளியூர் நபர்கள் தங்கியிருப்பது குறித்து லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

