/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க.,வின் 'துருப்புச்சீட்டு' அத்திக்கடவு திட்டம்! ஓட்டு அறுவடைக்கு உதவுமா?
/
அ.தி.மு.க.,வின் 'துருப்புச்சீட்டு' அத்திக்கடவு திட்டம்! ஓட்டு அறுவடைக்கு உதவுமா?
அ.தி.மு.க.,வின் 'துருப்புச்சீட்டு' அத்திக்கடவு திட்டம்! ஓட்டு அறுவடைக்கு உதவுமா?
அ.தி.மு.க.,வின் 'துருப்புச்சீட்டு' அத்திக்கடவு திட்டம்! ஓட்டு அறுவடைக்கு உதவுமா?
ADDED : ஏப் 09, 2024 11:16 PM
--நமது நிருபர்-
அ.தி.மு.க.,வின் துருப்புச்சீட்டாக உள்ள அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், இம்முறை தேர்தலில், எப்படி எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டத்தை உள்ளடக்கி, அத்திக்கடவு - அவிநாசி நீர் திட்டம் வடிவமைக்கப்பட்டது. மூன்று மாவட்ட மக்களின், 60 ஆண்டுகால கோரிக்கை இது.
கடந்த, 1963ல், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த மாரப்பக்கவுண்டர், இத்திட்டம் நிறைவேற்ற, சட்டசபையில் குரல் கொடுத்தார். தொடர்ந்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இவ்விவகாரத்தை கையில் எடுத்தன.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்ற வாக்குறுதி, ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாமல் இருந்ததில்லை. திட்டம் நிறைவேற்றப்பட்டால், மூன்று மாவட்டங்களில், 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்புவதன் வாயிலாக, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் வளம் பெறும்; 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் நலம் பெறும்.
அரசியல் முக்கியத்துவம்
மாறி, மாறி கட்சிகள் ஆட்சிக்கு வந்தும், திட்டம் கைக்கூடாத நிலையில், விவசாயிகள், பொதுமக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினரின் தொடர் போராட்டத்தின் விளைவாக, இத்திட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக மாறியது.
கொங்கு மண்டலத்தில் வலிமையாக காணப்படும் அ.தி.மு.க., இத்திட்டத்தை துருப்புச்சீட்டாக மாற்றிக் கொண்டது. இத்திட்டத்துக்கு தேவையான, 1,652 கோடி ரூபாயை, அப்போதைய முதல்வர் பழனிசாமி ஒதுக்கினார்.
கணக்கு தப்பியது
கடந்த, 2019 லோக்சபா தேர்தலை கணக்கில் வைத்து, அவிநாசியில், 2019 பிப்., 28ல், இத்திட்டத்துக்கு, அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையில், அடிக்கல் நாட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.
மக்கள் வரிப்பணத்தில், அத்திக்கடவு திட்டத்துக்கு செய்த பெரும் முதலீடு, அந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றிக்கு கைக்கொடுக்கும் என, அ.தி.மு.க., 'கணக்கு' போட்டது; இதை ஒரு கவுரவ பிரச்னையாகவும் கருதியது.
ஆனால், கணக்கு தப்பியது; 2019 லோக்சபா தேர்தலில், திருப்பூர், கோவை, ஈரோடு என, மூன்று மாவட்டங்களிலும், தி.மு.க., கூட்டணியே வெற்றி பெற்றது. இருப்பினும், அத்திக்கடவு திட்டப்பணி, 'விறுவிறு'வென நடந்தது; 2021 தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, 80 சதவீதம் பணிகளை, அ.தி.மு.க., அரசு முடித்திருந்தது.
சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை அ.தி.மு.க., கைப்பற்றியது. தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும், திட்டப்பணியில் தொய்வு தென்பட்டது.

