/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி காய்ப்பு திறன் அதிகரிக்க ஆலோசனை
/
தக்காளி காய்ப்பு திறன் அதிகரிக்க ஆலோசனை
ADDED : செப் 12, 2024 08:39 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, வட்டாரத்தில் ஆண்டு தோறும், ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர்.
ரசாயனத்தை தவிர்த்து, இயற்கை முறையில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி மாரிமுத்து கூறியதாவது:
தக்காளி செடியில், காய்ப்பு திறனை அதிகரிக்க, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் தேவைப்படுகிறது. இது, வாழைப்பூ மற்றும் வாழைப்பழ கரைசலில் அதிகமாக கிடைக்கிறது.
100 லிட்டர் தண்ணீரில், 10 கிலோ வாழைப்பூவை சிறிது சிறிதாக நறுக்கி, இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். அந்த கரைசலை, ஒரு ஏக்கருக்கு, தக்காளி செடியின் வேர் அருகில் ஊற்றி வேண்டும். இதனுடன் அரிசி கழுவிய தண்ணீரையும் பயன்படுத்தலாம். இதை மாதத்தில் இரண்டு முறை அளித்தால் தக்காளி காய்ப்பு அதிகரிக்கும்.
10 கிலோ வாழைப்பழம் மற்றும் சம அளவில் நாட்டு சர்க்கரை இரண்டும் சேர்த்து, 21 நாட்கள் ஊறவைத்து அதனை வடித்து, ஒரு ஏக்கருக்கு, வேர் அருகில் ஊற்றியோ, அல்லது தெளிப்பு முறையில் இலை வழியாகவோ கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தக்காளி நிறம் பளபளவென்றும், எடையும் அதிகரிக்கும். இதனால், தக்காளிக்கு கூடுதல் விலை கிடைக்கும். மேலும், இயற்கை முறையில் விளைவித்த தக்காளி, 10 முதல் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இவ்வாறு, கூறினார்.

