/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாள அறிவுரை
/
மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாள அறிவுரை
ADDED : மே 19, 2024 10:47 PM
பெ.நா.பாளையம்;பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், மின்சாதனங்களை பாதுகாப்பாக, பொதுமக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, மின்வாரிய துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
கோவை மாவட்டம் முழுக்க வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டும், தொடர்ந்தும், மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மின் சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என, மின்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மின் சாதனங்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்றதாக இருக்க வேண்டும். அத்தகைய மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், பின்னரும் ஸ்விட்சை ஆப் செய்து விட்டு பயன்படுத்த வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்டவை உரிய முறையில் 'எர்த்' இணைப்பு செய்வதுடன், மூன்று பின் சாக்கெட் கொண்ட பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உடைந்த ஸ்விட்ச், பிளக் போன்றவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும். பழுதுபட்ட மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஈரக்கையினால் மின் சாதனங்களை இயக்கக் கூடாது. கேபிள் 'டிவி' ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகே கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
மின்கம்பி அருகில் கொடி கட்டுவது மற்றும் மின்கம்பத்தில் கால்நடைகளை கட்டுவது உள்ளிட்டவை தவிர்க்க வேண்டும். மின்மாற்றி, மின் கம்பம் மற்றும் துணை மின் நிலையம் ஆகியவற்றின் அருகே செல்வதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும்.
மின் கம்பங்களுக்கு கீழே சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பி மற்றும் பழுதடைந்த மின் கம்பங்களை தொட வேண்டாம். இது தொடர்பான புகாரை உடனடியாக மின் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்துறையினர் அனுமதி இல்லாமல் மின் கம்பி மற்றும் மின் பாதை அருகே செல்லும் மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டக்கூடாது. எவ்வித காரணங்களுக்காகவும், பொதுமக்கள் மின் கம்பங்களில் ஏறக்கூடாது.
இடி, மின்னலின் போது 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது என்றனர்.

