/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு
/
தனியார் பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு
ADDED : மார் 26, 2024 11:19 PM

பெ.நா.பாளையம்;ஆனைகட்டி அருகே தனியார் நிறுவனத்தின் பஸ்சை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை புறநகர் வடக்கு பகுதியில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர், பல்வேறு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், வரவை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
ஆனைகட்டி சுற்றியுள்ள பல்வேறு மலை கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பணியாற்ற அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக தனியார் நிறுவனத்தின் வாகனங்கள், ஆனைகட்டி பகுதிக்கு தினமும் வந்து செல்கின்றன.
நேற்று காலை ஆனைகட்டியில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு நரசிம்மநாயக்கன்பாளையத்தை நோக்கி, தனியார் நிறுவனத்தின் பஸ் வந்து கொண்டிருந்தது. மாங்கரை அருகே வந்தபோது,ரோட்டின் குறுக்கே திடீரென வந்த ஆண் யானை ஒன்று பஸ்சை வழிமறித்து நின்றது.
பஸ்சில் இருந்த பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பலத்த கூச்சலிட்டனர். சிறிது நேரம் அதே பகுதியில் சுற்றிய யானை பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்தது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

